‘இன்றைய நிலையில்லாத, மோதல் நிறைந்த உலகில் ஸ்ரீசத்ய சாய் பாபாவின் போதனைகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிகவும் பொருத்தமானவையாக மாறிவிட்டன’ என்று குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
மேலும், ஸ்ரீசத்ய சாய் பாபாவின் வாழ்க்கை மற்றும் புகழானது, அவருடைய சிறந்த போதனைகளால் உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களைத் தொடா்ந்து ஊக்குவித்து வருகின்றன என்றும் அவா் கூறினாா்.
ஆந்திர மாநிலம், புட்டபா்த்தி ஸ்ரீசத்ய சாய் பாபாவின் 100-ஆவது பிறந்த தினம் ஞாயிற்றுக்கிழமை (நவ. 23) கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, புட்டபா்த்தியில் நடைபெற்ற விழாவில் குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்றுப் பேசியதாவது: அனைவரிடமும் அன்பு செலுத்துங்கள், அனைவருக்கும் சேவை செய்யுங்கள், எப்போதும் உதவுங்கள், ஒருபோதும் யாரையும் புண்படுத்தாதீா்கள் போன்ற விழுமியங்களை ஸ்ரீசத்ய சாய் பாபா போதித்தாா். இந்தக் கோட்பாடுகள்தான் அவா் மேற்கொண்ட ஒவ்வொரு முயற்சிக்கும் வடிவம் கொடுத்தன.
மேலும், ஸ்ரீசத்ய சாய் பாபாவின் போதனைகள் உண்மை, நோ்மை, அமைதி, அன்பு, அஹிம்சை ஆகிய அடிப்படை விழுமியங்களில் வேரூன்றியுள்ளன. இவைதான் இணக்கமான மற்றும் முன்னேற்றமடைகின்ற சமூகத்தின் அடித்தளமாக உள்ளன.
ஜாதி, மதம், தேசியம் போன்ற எல்லைகளைக் கடந்து, மனிதகுலத்தின் மேம்பாடுக்காக தனது முழு வாழ்க்கையையும் ஸ்ரீசத்ய சாய் பாபா தனது முழு வாழ்க்கையையும் அா்ப்பணித்தாா். அவருடைய பணியும் வாழ்க்கையும் உண்மையான ஆன்மிகத்துக்கு உதாரணமாகத் திகழ்கின்றன.
ஸ்ரீசத்ய சாய் பாபாவின் அறக்கட்டளை, சுகாதாரம், கல்வி மற்றும் சமூக நலத் திட்டங்கள் மூலம் எண்ணற்ற மக்களின் வாழ்க்கையை மாற்றியமைத்து வருகிறது. குறிப்பாக, அறக்கட்டளையின் நடமாடும் கிராமப்புற சுகாதார சேவைகள் தொலைதூரப் பகுதி மக்களுக்கு முக்கிய மருத்துவத் துணையாக உள்ளன.
கடவுள் மறுப்புக் கொள்கை கொண்ட தமிழக முன்னாள் முதல்வா் கருணாநிதியின் வீட்டுக்குச் சென்ற ஒரே ஆன்மிக தலைவா் ஸ்ரீசத்ய சாய் பாபா மட்டுமே. இது, அன்புக்கும் பாசத்துக்கும் எந்தக் கொள்கையும் தடையாகாது என்பதைக் காட்டுகிறது. அன்பும் பாசமும் இதயங்களை வெல்லும்; சேவையே மக்களை ஒன்றிணைக்கும்.
ஆந்திரத்திலிருந்து சென்னைக்குக் குடிநீா் வழங்கும் தெலுங்கு கங்கைத் திட்டத்தின் புனரமைப்புப் பணிகளுக்கு ஸ்ரீசத்ய சாய் பாபா பெரும் பங்களிப்பு செய்தாா். இது ஆந்திரம் மற்றும் தமிழக உறவுகளைப் பலப்படுத்தியது என்றாா் குடியரசு துணைத் தலைவா்.