அமெரிக்க விசா நிராகரிக்கப்பட்டதால் மனமுடைந்த ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண் மருத்துவர் தற்கொலை செய்துகொண்டார்.
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரோஹினி (வயது 38), ரஷியாவில் எம்பிபிஎஸ் பட்டம் பெற்றவர். இவர், ஹைதராபாத்தில் தனியாக தங்கி பணிபுரிந்து வருகிறார்.
அமெரிக்காவுக்குச் சென்று பணிபுரிய வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருந்துவந்த ரோஹினி, அமெரிக்காவுக்குச் செல்ல விசா விண்ணப்பித்திருந்தார்.
ஆனால், விசா நிராகரிக்கப்பட்டதால் மனமுடைந்த ரோஹினி, கடந்த வெள்ளிக்கிழமை இரவு தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
அவர் நீண்ட நேரம் போன் எடுக்காததால் சந்தேகமடைந்த பெற்றோர் சனிக்கிழமை காலை ஹைதராபாத் சென்று, அவர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, ரோஹினி உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த சில்கல்குடா போலீசார் ரோஹினியின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அனுப்பிவைத்தனர்.
தற்கொலை கடிதம் மீட்பு
ரோஹினி தற்கொலை செய்துகொண்ட அறையில் இருந்து தற்கொலை கடிதத்தை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
அதில், ”தன்னை தவிர அனைத்து குடும்ப உறுப்பினர்களும் நல்ல நிலைமையில் இருக்கின்றனர்” என்று குறிப்பிட்டிருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், சில்கல்குடா போலீசார் தெரிவித்ததாவது:
தற்கொலை செய்துகொண்ட மருத்துவர் ரோஹினி, பத்மாராவ் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 8 ஆண்டுகளாக வசித்து வந்தார்.
அமெரிக்கா விசா கிடைக்காததாலும், திருமணம் ரத்து செய்யப்பட்டதாலும் மனமுடைந்த நிலையில் இருந்த ரோஹினி, கடந்த வெள்ளிக்கிழமை தற்கொலைக் குறிப்பை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவர் மயக்க மாத்திரை அதிகளவில் உட்கொண்டாரா? அல்லது தனக்குத் தானே ஊசி ஏதும் போட்டுக் கொண்டாரா? என்பது உடற்கூராய்வு முடிவில் தெரியவரும்” எனத் தெரிவித்தனர்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.