கொல்கத்தா விமான நிலையத்தில் 13 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏர் இந்தியாவுக்குச் சொந்தமான விமானம் பெங்களூருவுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
ஏர் இந்தியாவுக்குச் சொந்தமான போயிங் 737-200 ரக விமானம் (பதிவு எண் விடிஇஎச்எச்) கடந்த 1982 ஆம் ஆண்டு இந்தியன் ஏர்லைன்ஸ் குழுவில் சேர்க்கப்பட்டது. பின்னர் 1998 ஆம் ஆண்டு அலையன்ஸ் ஏர் நிறுவனத்துக்கு குத்தகைக்கு விடப்பட்டது.
தொடர்ந்து, 2007 ஆம் ஆண்டு மீண்டும் இந்தியன் ஏர்லைன்ஸுக்கு திரும்பிய இந்த விமானம் சரக்கு விமானமாக மாற்றப்பட்டு பயன்படுத்தப்பட்டது. பின்னர், இந்தியன் ஏர்லைன்ஸ், ஏர் இந்தியாவுடன் இணைக்கப்பட்ட பிறகு, இந்திய தபால்துறைக்காக இந்த விமானம் பயன்படுத்தப்பட்டது.
இந்த நிலையில், கடந்த 2012 ஆம் ஆண்டு இந்த விமானத்துக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில், கொல்கத்தா விமான நிலையத்தின் தென்கிழக்கு விளிம்பில் நிறுத்திவைக்கப்பட்டன.
சுமார் 13 ஆண்டுகளாக கொல்கத்தாவில் கேட்பாறின்றி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த விமானத்தை தற்போதைய ஏர் இந்தியா நிர்வாகத்தினர் மீட்டுள்ளனர்.
கடந்த நவம்பர் 14 ஆம் தேதி கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து டிராக்டர் டிரெய்லர் முறையில் சுமார் 1900 கி.மீ. தொலைவில் உள்ள பெங்களூரு விமான நிலையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
இந்த விமானம் தற்போது பராமரிப்பு பொறியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப் பயன்படுத்தப்படவுள்ளது.
கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து அகற்றப்பட்ட 14-வது செயலிழந்த விமானம் இது என்றாலும், இரு காரணங்களால் இந்த விமானம் தனித்துவம் பெற்றுள்ளது.
முதலாவது, ஏர் இந்தியா நிறுவனத்துக்கு இப்படியொரு விமானம் இருந்ததே தெரியாது, மற்றொன்று, இந்த விமானத்தின் பிராட் & விட்னி என்ஜின்கள் நல்ல நிலையில் இருந்ததால் விற்கப்பட்டுள்ளன. ஓய்வுபெற்ற விமானத்தின் என்ஜின் விற்கப்பட்டது இதுவே முதல்முறையாகும்.
ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி கேம்பல் வில்சன் ஊழியர்களுக்கு எழுதிய கடிதத்தில், கொல்கத்தா விமான நிலைய அதிகாரிகள் எச்சரிக்கும் வரை, ஏர் இந்தியாவுக்குச் சொந்தமாக இப்படியொரு விமானம் இருப்பதே தெரியாது என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாக ஏர் இந்தியா நிறுவனம் தனியார்மயப்படுத்தலின் போது, விமானங்களுக்கான பதிவில் இந்த விமானத்தைப் பற்றிய தகவல்கள் கொடுக்கவில்லை.
தற்போது இந்த விமானத்தை கொல்கத்தா விமான நிலையத்தில் 13 ஆண்டுகள் நிறுத்தி வைத்ததற்காக ஏர் இந்தியா நிறுவனத்திடம் இருந்து ரூ. 1 கோடி கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.