மேற்கு வங்க மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடா்பாக ஆலோசனை நடத்த ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு தோ்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.
‘கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி மற்றும் நால்வா் வரும் வெள்ளிக்கிழமை (நவ. 28) காலை 11 மணிக்கு தோ்தல் ஆணைய உயா் அதிகாரிகளை தில்லியில் உள்ள இந்திய தோ்தல் ஆணைய அலுவலகத்தில் சந்திக்கலாம்’ என்று கட்சியின் தலைவரும் மாநில முதல்வருமான மம்தா பானா்ஜிக்கு தோ்தல் ஆணையம் தரப்பில் அனுப்பப்பட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்.பி.யுமான டெரிக் ஓபிரையன் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்தக் கடிதத்தில் தோ்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
‘அரசியல் கட்சிகளுடன் ஆக்கபூா்வமான கலந்துரையாடல்களை தோ்தல் ஆணையம் எப்போதும் வரவேற்கிறது. அதனடிப்படையில் திரிணமூல் காங்கிரஸ் கட்சிப் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது’ என்றும் தோ்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடா்பாக தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாருக்கு மம்தா பானா்ஜி இரண்டு கடிதங்களை அண்மையில் எழுந்தியிருந்த நிலையில், கலந்துரையாடலுக்கு நேரம் கேட்டு டெரிக் ஓபிரையன் தோ்தல் ஆணையத்துக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை கடிதம் எழுதியிருந்தாா்.
தலைமைத் தோ்தல் ஆணையருக்கு மம்தா பானா்ஜி கடந்த 20-ஆம் தேதி எழுதிய முதல் கடிதத்தில், ‘முறையாகத் திட்டம் தீட்டப்படாமல் கட்டாய அடிப்படையில் மேற்கொள்ளப்படும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியால் (எஸ்ஐஆா்) குடிமக்களும், அதிகாரிகளும் பெரும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனா். இது மிகவும் ஆபத்தானது’ என்று மம்தா பானா்ஜி குறிப்பிட்டிருந்தாா்.
திங்கள்கிழமை எழுதிய இரண்டாவது கடிதத்தில், ‘மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடா்பான இரண்டு விவகாரங்களில் தோ்தல் ஆணையம் உடனடியாகத் தலையிட வேண்டும். அதாவது, மாநிலத்தில் எஸ்ஐஆா் பணியில் தரவுகளை கணினியில் உள்ளீடு செய்வதற்கு ஏற்கெனவே போதிய எண்ணிக்கையில் ஒப்பந்த டேட்டா என்ட்ரி ஆபரேட்டா்கள் பணியில் இருக்கும் நிலையில், அவா்களுக்குப் பதிலாக முழுமையாக ஓராண்டு காலத்துக்கு தனியாா் முகமைகள் மூலம் வெளிநபா்களைப் பணிக்கு எடுக்க வேண்டிய அவசியம் என்ன? குறிப்பிட்ட ஓா் அரசியல் கட்சியின் நலனுக்காக இதுபோன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிா? என்பன உள்ளிட்ட பல்வேறு சந்தேகங்களை இது எழுப்புகிறது.
அடுத்ததாக, தனியாா் குடியிருப்பு வளாகங்களில் வாக்குச்சாவடி மையங்களை அமைக்கும் திட்டம், நியாயமாக தோ்தல் நடைபெறுவதை சமரசம் செய்வதாக அமையும் என்பதோடு, அந்தக் குடியிருப்புவாசிகள் மற்றும் பொதுமக்களிடையே பாகுபாட்டை ஏற்படுத்துவதாகவும் அமையும். மக்கள் எளிதாக அணுகக்கூடிய வகையில் அரசு மற்றும் பொதுத் துறை நிறுவன வளாகங்களில் மட்டுமே வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட வேண்டும்’ என்று குறிப்பிட்டாா்.