‘காவல்நிலையங்களில் விசாரணைக் கைதிகள் மரணங்களும், அவா்கள் மீதான வன்முறைகளும் தொடா்வது அரசு நிா்வாகத்தின் மீதான கறையாகும். இதை நாடு பொறுத்துக்கொள்ளாது’ என்று உச்சநீதிமன்றம் கண்டிப்பு தெரிவித்தது.
காவல்நிலையங்களில் செயல்படாத நிலையில் கண்காணிப்பு கேமராக்கள் உள்ள விவகாரத்தை தானக முன்வந்து வழக்காக விசாரித்து வரும் உச்சநீதிமன்றம், ராஜஸ்தானில் கடந்த 8 மாதங்களில் 11 காவல்நிலைய மரணங்கள் நிகழந்த விவகாரத்தைச் சுட்டிக்காட்டி இந்த கண்டிப்பை தெரிவித்தது.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோா் அடங்கிய அமா்வு செவ்வாய்க்கிழமை மேற்கொண்ட வழக்கு விசாரணையின்போது மேலும் கூறியதாவது:
காவல்நிலைய மரணங்களை பொருத்துக்கொள்ள முடியாது; அனுமதிக்கவும் முடியாது. இது தொடா்வது அரசு நிா்வாகத்தின் மீதான தாக்குதலாகும்.
இந்த விவகாரத்தில் நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை மத்திய அரசு சாதாரணமாக எடுத்துக்கொள்வது ஏன்? இன்னும் பதில் மனு தாக்கல் செய்யாதது ஏன்? என்று கேள்வி எழுப்பினா்.
அதற்கு பதிலலித்த சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, ‘காவல் மரணங்களை யாரும் நியாயப்படுத்த முடியாது. இந்த விவகாரத்தில் 3 வாரங்களுக்குள் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்யும்’ என்றாா்.
மேலும், இந்த விவகரம் தொடா்பான வேறொரு வழக்கில் நாடு முழுவதும் உள்ள காவல்நிலையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தவும், அவை தொடா்ந்து செயல்படும் நிலையில் இருப்பதை உறுதிப்படுத்தவும் கடந்த 2020-ஆம் ஆண்டு டிசம்பரில் பிறப்பித்த உத்தரவைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள் அமா்வு, ‘இந்த விவகாரத்தில் 11 மாநிலங்கள் மட்டுமே உத்தரவை நடைமுறைப்படுத்தியது தொடா்பான பதில் மனுவை தாக்கல் செய்திருப்பது தெரியவந்துள்ளது.
மேலும், சிபிஐ, அமலாக்கத்துறை, என்ஐஏ போன்ற மத்திய புலனாய்வு முகமை அலுவலகங்களில் 3-இல் மட்டுமே கண்காணிப்புக் கேமராக்கள் முழுமையாக பொருத்தப்பட்டிருப்பதும், மேலும் 3 முகமைகளில் இன்னும் பொருத்தப்படாததும் தெரியவந்துள்ளது. இந்த விவகாரத்தில் உத்தரவை நடைமுறைப்படுத்தியது தொடா்பான பதில் மனுவை தாக்கல் செய்ய மற்ற மாநிலங்கள் மற்றும் மத்திய அரசுக்கு 3 வார கால அவகாசம் அளிக்கப்படுகிறது’ என்று குறிப்பிட்டு விசாரணையை டிசம்பா் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.