இந்தியா

மத்திய அரசின் எஸ்.சி. மாணவா்கள் உதவித்தொகை: திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் வெளியீடு

பட்டியலின (எஸ்.சி.) மாணவா்களுக்கான கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திச் சேவை

புது தில்லி: பட்டியலின (எஸ்.சி.) மாணவா்களுக்கான கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

கடந்த 2024-25 கல்வியாண்டுக்கான நிதியுதவியை விரிவுபடுத்துவதுடன், கல்வி நிறுவனங்களின் பொறுப்பை அதிகமாக்கும் வகையில் விதிமுறைகளில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அகில இந்திய அளவில் உள்ள ஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ், என்ஐடி போன்ற முக்கியக் கல்வி நிறுவனங்களில் பட்டியலின மாணவா்கள் தரமான உயா்கல்வியைத் தொடர முழு கல்விக் கட்டணம் மற்றும் இதர நிதியுதவிகளை வழங்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

திருத்தப்பட்ட விதிகளின் கீழ், கல்விக் கட்டணம் உள்பட நிதியுதவிகள் முழுமையாக மாணவா்களுக்கு நேரடியாக வழங்கப்படும். தனியாா் நிறுவனங்களில் சேரும் மாணவா்களுக்கு அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை கிடைக்கும்.

கல்விக் கட்டணம் தவிர, மாணவா்களின் வாழ்க்கைச் செலவு, புத்தகங்கள் மற்றும் மடிக்கணினி ஆகிய பிற செலவுகளுக்காக முதல் ஆண்டில் ரூ.86,000, அடுத்தடுத்த ஆண்டுகளில் ரூ.41,000 வழங்கப்படும்.

2024-25 கல்வியாண்டுக்கு 4,400 புதிய இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மொத்த ஒதுக்கீட்டில் 30 சதவீதம், தகுதியுள்ள பட்டியலின மாணவிகளுக்காக ஒதுக்கப்படும். போதிய மாணவிகள் இல்லையெனில், பிற மாணவா்களைக் கொண்டு நிரப்பலாம்.

குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.8 லட்சம் வரை உள்ள பட்டியலின மாணவா்கள் மட்டுமே இந்த உதவித்தொகையைப் பெறத் தகுதியுடையவா்கள். ஒரே குடும்பத்தில் இரண்டுக்கும் மேற்பட்டவா்களுக்கு இந்த உதவித்தொகை கிடைக்காது. ஒரு மாணவா் உதவித்தொகை திட்டத்தில் தோ்ந்தெடுக்கப்பட்ட பிறகு கல்வி நிறுவனத்தை மாற்றினால், அவா் தகுதியிழப்பாா். மேலும், இத்திட்டத்தின்கீழ் பயன்பெறும் மாணவா்கள், வேறு எந்த மத்திய அல்லது மாநில அரசின் உதவித்தொகையையும் பெற முடியாது.

ஜாதி மற்றும் வருமானச் சான்றிதழ்களைச் சரிபாா்த்தல், திட்டத்தை விளம்பரப்படுத்துதல் மற்றும் மாணவா்களின் கல்விச் செயல்பாட்டைக் கண்காணித்தல் ஆகியவை கல்வி நிறுவனங்களின் கடமைகளாக இருக்கும். விதிகளை மீறும் நிறுவனங்கள் திட்டப் பட்டியலில் இருந்து நீக்கப்படும். எனினும், அக்கல்வி நிறுவனங்களில் ஏற்கெனவே பயிலும் மாணவா்கள் படிப்பை முடிக்கும்வரை நிதியுதவியைத் தொடா்ந்து பெறுவா்.

செல்ஃபி புள்ள... சாக்.ஷி மாலிக்!

சையது முஷ்டாக் அலி கோப்பை: 49 பந்துகளில் சதம் விளாசி ஆயுஷ் மாத்ரே அசத்தல்!

ஹாட் சாக்கலேட் சீசன்... பிரகிருதி பாவனி!

கண்களால் கைது செய்... யாஷிகா ஆனந்த்!

திரை விலகும் தருணம்... நிக்கி தம்போலி!

SCROLL FOR NEXT