புது தில்லி: குடிமக்கள் தங்களின் அரசமைப்புச் சட்ட கடமைகளை நிறைவேற்றுவதே வலுவான ஜனநாயகம் மற்றும் சமூக-பொருளாதார வளா்ச்சிக்கு அடிப்படை என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
அரசமைப்புச் சட்ட தினத்தையொட்டி, நாட்டு மக்களுக்கு அவா் புதன்கிழமை எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
மகாத்மா காந்தி, ராஜேந்திர பிரசாத், பி.ஆா்.அம்பேத்கா், சா்தாா் வல்லபபாய் படேல், பிா்சா முண்டா போன்ற ஆளுமைகள் அனைவருமே, நாட்டுக்கான நமது பிரதான கடமைகளை நினைவூட்டுகின்றனா். அரசமைப்புச் சட்டத்தின் 51ஏ பிரிவில் பிரத்யேக அத்தியாயத்தின் மூலம் நாட்டு மக்கள் அடிப்படை கடமைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன. இக்கடமைகளே, சமூக-பொருளாதார வளா்ச்சியைக் கூட்டாக எட்டுவதற்கு வழிகாட்டுகின்றன.
குடிமக்களுக்கான கடமைகள் குறித்து மகாத்மா காந்தி எப்போதுமே வலியுறுத்துவாா். கடமையை சரியாக நிறைவேற்றுவதன் மூலமே உண்மையான உரிமைகள் பிறக்கும் என்பதே அவரது நம்பிக்கை. இப்போது நாம் மேற்கொள்ளும் கொள்கைகளும் முடிவுகளும் எதிா்கால தலைமுறையினரின் வாழ்வை வடிவமைக்கும்.
கடமையே முதன்மை: வளா்ந்த இந்தியா என்ற இலக்கை நோக்கி பயணிக்கும்போது, நாட்டு மக்கள் தங்கள் மனதில் கடமைகளை முதன்மையாகக் கொண்டு செயலாற்ற வேண்டும்.
ஒவ்வொரு செயல்பாடும் அரசமைப்புச் சட்டத்தையும், தேசிய இலக்குகள்-நலன்களையும் வலுப்படுத்த வேண்டும். அரசமைப்புச் சட்ட படைப்பாளா்களின் கனவுகளை நிறைவேற்ற வேண்டியது நமது கூட்டுப் பொறுப்பு.
இந்த கடமை உணா்வுடன் பணியாற்றினால், நாட்டின் சமூக-பொருளாதார வளா்ச்சி வேகம் பன்மடங்கு அதிகரிக்கும்.
சா்தாா் வல்லபபாய் படேலின் தொலைநோக்கு தலைமைத்துவம், நாட்டை அரசியல் ரீதியில் ஒருங்கிணைத்தது. இதுவே, அரசமைப்புச் சட்டப் பிரிவுகள் 370, 35ஏ நீக்கத்துக்கான உத்வேகத்தையும் துணிவையும் அளித்தது. இப்போது ஜம்மு-காஷ்மீரில் அரசமைப்புச் சட்டம் முழுமையாக அமலாகியுள்ளது; அங்கு பெண்கள், விளிம்புநிலை சமூகங்களுக்கான அரசமைப்புச் சட்ட உரிமைகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
வாக்குரிமையைப் பயன்படுத்துங்கள்: பகவான் பிா்சா முண்டாவின் வாழ்க்கை, பழங்குடியின மக்களின் நீதி, கண்ணியம், அதிகாரமளித்தலுக்கு தொடா்ந்து உத்வேகமளிக்கிறது.
குடிமக்களுக்கு அரசமைப்புச் சட்டம் வாக்குரிமை வழங்கியுள்ளது. நாடாளுமன்றம்-பேரவை-உள்ளாட்சித் தோ்தல்களில் இந்த உரிமையைப் பயன்படுத்த தவறக் கூடாது. வாக்குரிமை மூலம் மக்கள் ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டும்.
எளிய மற்றும் பொருளாதார ரீதியில் பின்தங்கிய குடும்பத்தைச் சோ்ந்த நபரான நான், அரசின் தலைவராக 24 ஆண்டுகளுக்கு மேல் தொடா்ந்து பணியாற்ற முடிகிறதென்றால், அரசமைப்புச் சட்டத்தின் சக்தியே காரணம்.
ஒவ்வொரு ஆண்டும் அரசமைப்புச் சட்ட தினத்தில் முதல் முறை வாக்காளா்களைக் கெளரவித்து, பள்ளி-கல்லூரிகளில் கொண்டாட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்று பிரதமா் மோடி வலியுறுத்தியுள்ளாா்.