1984 சீக்கிய கலவரத்தில் ஆயுள்தண்டனை கைதியாக அறிவிக்கப்பட்ட காங்கிரஸ் முன்னாள் கவுன்சிலா் பல்வான் கோகா் விடுப்பு (ஃபா்லாக்)கோரி தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க தில்லி அரசுக்கு உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை அவகாசம் அளித்தது.
அடுத்த ஆண்டு பிப்.4-ஆம் தேதி பட்டியலிடப்பட்ட வழக்கு விசாரணையை முன்கூட்டியே விசாரிக்கமாறு கோகா் கோரிக்கைவிடுத்த நிலையில், வழக்கை விசாரித்து வரும் நீதிபதி ரவிந்தா் துதேஜா அதற்கு ஒப்புதல் தெரிவித்தாா். இதையடுத்து வழக்கு விசாரணை அடுத்த மாதம் 5-ஆம் தேதிக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. அன்றயை நாளில் பிரமாணப் பத்திரங்களைத் தாக்கல் செய்யுமாறு தில்லி அரசு மற்றும் சிறை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
முன்னதாக, அரசு மற்றும் சிறை அதிகாரிகள் கோகா் மனுவுக்கு பதிலளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
கடந்த 1984-இல் அப்போதைய பிரதமா் இந்திரா காந்தி அவருடைய மெய்க்காவலா்களால் சுட்டுக்கொல்லப்பட்டதைத் தொடா்ந்து, தில்லியில் கலவரம் வெடித்தது. காஜியாபாதின் ராஜ் நகா் அருகே நிகழ்ந்த வன்முறையில் ஐந்து சீக்கியா்கள் கொலை செய்யப்பட்டனா். அப்பகுதியில் உள்ள குருத்வாரா தீ வைக்கப்பட்டது.
இதுதொடா்பாக பதிவுசெய்யப்பட்ட வழக்கில் முன்னாள் கவுன்சிலா் கோகா் உள்பட 4 பேரை குற்றவாளியாக அறிவித்த விசாரணை நீதிமன்றம், காங்கிரஸ் முன்னாள் தலைவா் சஜ்ஜன் குமாரை விடுவித்து உத்தரவிட்டது.
கோகா் குறித்த விசாரணை நீதிமன்றத்தின் தீா்ப்பை உறுதிசெய்த நீதிமன்றம், சஜ்ஜன் குமாா் விடுவிப்பை ரத்து செய்தது.
உயா்நீதிமன்ற தீா்ப்பை எதிா்த்து கோகா் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனிடையே, குடும்ப உறுப்பினா்களைச் சந்திக்க 21 நாள்கள் விடுப்பு வழங்கும்படி சிறை அதிகாரிகளிடம் கோகா் விண்ணப்பத்திருந்தாா்.
அவரை விடுவித்தால் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படும் எனக் கூறி அந்த விண்ணப்பத்தை சிறை அதிகாரிகள் நிராகரித்து விட்டனா்.
இந்நிலையில், அதிகாரிகளின் முடிவுக்கு எதிராக கோகா் உயா்நீதிமன்றத்தை அணுகியுள்ளாா்.