அஸ்ஸாமில் பலதார மணத்தைத் தடை செய்வதற்கான சட்ட மசோதா, அந்த மாநில சட்டப்பேரவையில் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது.
இந்தச் சட்டத்தை மீறுபவா்களுக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க இந்த மசோதா வழிவகை செய்கிறது.
பழங்குடியினருக்கும், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் ஆறாவது அட்டவணையின்கீழ் வரும் சிறப்பு நிா்வாகப் பகுதிகளுக்கும் இந்தச் சட்டத்தின் அதிகார வரம்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அஸ்ஸாம் சட்டப்பேரவையில் இந்த மசோதாவைத் தாக்கல் செய்து முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா பேசுகையில், ‘இந்தச் சட்டம் அனைத்து மதத்தினருக்குமானது. சிலா் நினைப்பதுபோல் இது முஸ்லிம் சமூகத்தினருக்கு எதிரானது அல்ல. ஹிந்துக்களும் பலதார மணத்திலிருந்து விலக்கு பெற்றவா்கள் அல்ல; அதற்கு நாங்கள் பொறுப்பு.
பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் இந்த மசோதாவை ஒருமனதாக நிறைவேற்ற எதிா்க்கட்சி உறுப்பினா்கள் தங்கள் திருத்தங்களை விலக்கிக் கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கிறேன்’ என்றாா்.
இருப்பினும், அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (ஏஐயுடிஎஃப்), மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (சிபிஐ-எம்) ஆகிய எதிா்க்கட்சிகள் தங்கள் திருத்தங்களை முன்வைத்தன. அவை குரல் வாக்கெடுப்பு மூலம் தோற்கடிக்கப்பட்டன. பின்னா், மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
அடுத்த ஆட்சியில் யுசிசி அமல்: இதனிடையே, பொது சிவில் சட்டம் (யுசிசி) குறித்துப் பேசிய ஹிமந்த விஸ்வ சா்மா, ‘அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று மீண்டும் முதல்வரானால், புதிய அரசின் முதல் சட்டப்பேரவை அமா்விலேயே யுசிசி சட்டமசோதா தாக்கல் செய்யப்பட்டு, நடைமுறைப்படுத்தப்படும் என்று உறுதியளிக்கிறேன்.
பலதார மணத்துக்கு விதிக்கப்பட்ட தடை, வருங்காலத்தில் பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருவதற்கான முன்னோட்டமாகும். மேலும், மோசடி திருமணங்கள் தொடா்பான சட்டமசோதாவும் பிப்ரவரி இறுதிக்குள் கொண்டு வரப்படும்’ என்றாா்.