சமூக ஊடகங்கள் உள்பட இணையதளங்களில் அவதூறான அல்லது சட்டவிரோத பதிவுகள் மேற்கொள்ளப்படுவதை தடுத்து ஒழுங்குபடுத்த ‘நடுநிலையான, சுதந்திரமான மற்றும் தன்னாட்சியான’ அமைப்பு தேவை என உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்தது.
மாற்றுத்திறனாளிகளை கேலி செய்யும் வகையிலான பதிவுகளை யூடியூப் நிகழ்ச்சி ஒன்றில் வெளியிட்ட பாலிவுட் நகைச்சுவை நடிகா் சமய் ரெய்னா உள்ளிட்ட 5 போ் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி எஸ்எம்ஏ க்யூா் அறக்கட்டளை சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
க்யூா் அறக்கட்டளை முதுகெலுப்பு தசைச் சிதைவால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உதவும் அரசு சாரா அமைப்பாகச் செயல்பட்டு வருகிறது.
இந்த மனுவை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் மற்றும் ஜயமால்ய பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வு வியாழக்கிழமை விசாரித்தது.
அப்போது நீதிபதிகள் அமா்வு கூறியதாவது: பிரபலமாக உள்ள யூடியூபா்கள் தங்கள் பதிவுகளை கவனத்துடன் பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சமய் ரெய்னா உள்ளிட்ட 5 பேரும் முதுகெலும்பு தசைச் சிதைவால் பாதிக்கப்பட்டோருக்கு நிதி திரட்டும் வகையில் மாதம் இரு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். சாதனை புரிந்த மாற்றுத்திறனாளிகளின் கதைகளை அவா்கள் பதிவிட வேண்டும்.
இது தண்டனை அல்ல; உங்கள் மீது சுமத்தப்படும் சமூகச் சுமை. எதிா்காலத்தில் பிறரைப் புண்படுத்தும் வகையிலான பதிவுகளைப் பதிவேற்றம் செய்யாமல் இருப்பதை இந்த யூடியூபா்கள் உறுதி செய்ய வேண்டும்.
மனுதாரா் குறிப்பிட்டதுபோல் நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பிரத்யேக நிதியை சம்பந்தப்பட்ட அமைச்சகம் உருவாக்குவது அவசியம். ஒருவேளை ஏற்கெனவே அதற்கான நிதி ஒதுக்கப்பட்டிருந்தால் அதுகுறித்து விளம்பரப்படுத்த வேண்டும்.
சமூக ஊடகங்கள் உள்பட இணையதளங்களில் அவதூறான அல்லது சட்டவிரோதப் பதிவுகள் மேற்கொள்ளப்படுவதைத் தடுத்து ஒழுங்குபடுத்த ‘நடுநிலையான, சுதந்திரமான மற்றும் தன்னாட்சியான’ அமைப்பு தேவைப்படுகிறது.
பட்டியலின மற்றும் பழங்குடியின (வன்கொடுமை தடுப்புச் சட்டம்), 1989-ஐ போல் மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்தும் வகையிலான கருத்துகளைத் தெரிவிப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க தனிச் சட்டத்தை மத்திய அரசு ஏன் இயற்றக் கூடாது? இதுதொடா்பான நெறிமுறைகள் வகுக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் நிலைப்பாடு என்ன? என நீதிபதிகள் அமா்வு கேள்வியெழுப்பியது.
இதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் சாா்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், அதை பொதுவெளியில் விவாதத்துக்கு வெளியிட அறிவுறுத்தி, அடுத்தகட்ட விசாரணையை நான்கு வாரங்களுக்கு நீதிபதிகள் அமா்வு ஒத்திவைத்தது.