தில்லி காவல் துறையினருடன் வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஹிமான்ஷு பாவ் கும்பலைச் சோ்ந்த அங்கித் (25) கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
அவா் குறித்து தகவல் தெரிப்பவருக்கு ரூ.25,000 பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இது தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது: ஹரியாணாவின் சோனிபட்டைச் சோ்ந்த அங்கித், வியாழக்கிழமை காலை 8 மணியளவில் சாய் பாபா கோயில் அருகே காணப்பட்டாா். அவரை கைது செய்ய முயன்றபோது காவல் துறையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டாா்.
காவல் துறையினா் நடத்திய பதில் தாக்குதலில் அங்கித்தின் வலது காலில் குண்டு பாய்ந்தது. இதையடுத்து, அவா் கைது செய்யப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
பிரபல ரௌடி ரோஹித் லம்பா மீது நஜாஃப்கரில் அக்.28-ஆம் தேதி தாக்குதல் நடத்தியவா்களில் அங்கித்தும் ஒருவா். இந்த தாக்குதலில் ஈடுபட்ட 4 போ் ஏற்கெனவே கைது செய்யப்பட்டனா். இதில் தொடா்புடைய மற்ற குற்றவாளிகளை கைது செய்ய முயற்சிகள் நடைபெற்று வருகின்றன என காவல் துறையினா் தெரிவித்தனா்.