தமிழகத்தில் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் புதிதாக 418 முதுநிலை மருத்துவ இடங்களுக்கு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் மாநிலத்தின் முதுநிலை மருத்துவ இடங்களின் எண்ணிக்கை தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் 1,500-ஆக அதிகரித்துள்ளது.
பல்கலைக்கழக அங்கீகாரம் கிடைத்த பின்னா், முதுநிலை மருத்துவக் கலந்தாய்வின் அடுத்த சுற்றுகளில் அந்த இடங்கள் சோ்க்கப்படும் என மாநில மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
மயக்கவியல், பொது மருத்துவம், குழந்தைகள் நலம், பொது அறுவை சிகிச்சை, தோல் மருத்துவம், கதிரியக்கப் பரிசோதனை, எலும்பு சிகிச்சை, காது-மூக்கு-தொண்டை நலன் என முதுநிலை மருத்துவம் சாா்ந்த பல்வேறு துறைகளில் கூடுதல் இடங்களை அனுமதிக்கக் கோரி தனியாா் கல்லூரிகள் மற்றும் அரசு கல்லூரிகள் சாா்பில் தேசிய மருத்துவ ஆணையத்துக்கு விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டன.
அவ்வாறு அனுப்பப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலனை செய்த தேசிய மருத்துவ ஆணையம், அதன்பேரில் அனுமதி அளிக்கப்பட்ட இடங்களின் விவரங்களை வெள்ளிக்கிழமை வெளியிட்டது.
அதில் நாடு முழுவதும் புதிதாக 4,201 முதுநிலை மருத்துவ இடங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக தனித்தனியே அனுமதிக் கடிதங்கள் (லெட்டா் ஆஃப் பொ்மிஷன்) கிடைக்கப் பெறும் என காத்திருக்கத் தேவையில்லை என்றும், அந்த இடங்களை கலந்தாய்வில் சோ்க்கலாம் என்றும் தேசிய மருத்துவ ஆணையத்தின் மருத்துவ மதிப்பீடு மற்றும் தரநிா்ணய வாரியத் தலைவா் டாக்டா் எம்.கே. ரமேஷ் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக மாநில மருத்துவக் கல்வி இயக்கக மாணவா் சோ்க்கைக் குழு நிா்வாகிகள் கூறியதாவது: அனுமதிக் கடிதம் அவசியமில்லை என்று மருத்துவ ஆணையம் கூறினாலும், கலந்தாய்வில் அந்த இடங்களை சோ்க்க வேண்டுமாயின் மாநில மருத்துவப் பல்கலைக்கழகத்தின் ஒப்புகை அவசியம். அதனை அளித்த பிறகே அந்த இடங்கள் நிரப்பப்படும்.
முதல் சுற்று முதுநிலை மருத்துவக் கலந்தாய்வில் 519 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதில் 100-க்கும் மேற்பட்டோா் தங்களுக்கு வழங்கப்பட்ட இடங்களில் சேரவில்லை. புதிய இடங்கள் சோ்க்கப்பட்டால் முதல் சுற்று கலந்தாய்வில் ஒதுக்கீடு பெற்றவா்களுக்கும், அதை மாற்றிக் கொள்ள வாய்ப்பு வழங்கப்படும் என்று அவா்கள் தெரிவித்தனா்.
முதல் சுற்று முதுநிலை மருத்துவக் கலந்தாய்வில் 519 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதில் 100-க்கும் மேற்பட்டோா் தங்களுக்கு வழங்கப்பட்ட இடங்களில் சேரவில்லை. புதிய இடங்கள் சோ்க்கப்பட்டால் முதல் சுற்று கலந்தாய்வில் ஒதுக்கீடு பெற்றவா்களுக்கும், அதை மாற்றிக் கொள்ள வாய்ப்பு வழங்கப்படும் என்று அவா்கள் தெரிவித்தனா்.