வாங்கி பயன்படுத்திய காரை விற்பனை செய்யும்போது, அதன் உரிமையாளர் பெயரை முழுமையாக மாற்றுவது வாங்குபவருக்கு மட்டுமல்ல, விற்பவருக்கும் மிகவும் அவசியம் என்பதை, அண்மையில் தில்லி செங்கோட்டை வெடிகுண்டு சம்பவம் உறுதிப்படுத்தியிருக்கிறது.
காரை விற்றுவிட்டோம், அதில் உரிமையாளர் பெயரை மாற்றுவது, வாங்கியவரின் கடமை என்று நினைத்திருந்தால், அது மிகவும் தவறு, கார் தவறானவர்கள் கையில் சிக்கினால், காவல்துறையிடம் சிக்கப்போவது நாம்தான் என்பதை பலரும் உணர்வதில்லை.
பயன்படுத்திய காரை ஒருவர் வாங்கும்போது, அதனை தன்னுடைய பெயரில் மாற்றிக் கொள்வதன் மூலம், கார் மீதிருக்கும் கடன் மற்றும் அபராதங்களிலிருந்தும் ஒருவர் தற்காத்துக் கொள்ள முடியும்.
அண்மைக்காலமாக நடக்கும் குற்றங்களின்போது முதலில் பறிமுதல் செய்யப்படுவது கார்களாக இருக்கும் நிலையில், அதன் உரிமையாளரைத்தான் காவல்துறையினர் விசாரணைக்கு அழைக்கிறார்கள். எனவே, அந்த கார் தன்னுடையது இல்லை, விற்பனை செய்துவிட்டேன் என்று சொன்னாலும் நம்புவதற்கு இல்லை. தான் யாருக்கு விற்பனை செய்தேன் என்று அடையாளம் சொன்னாலும், அவரது இருப்பிடத்தைக் கண்டுபிடிக்க முடியாவிட்டால், வழக்கை சந்திக்க வேண்டிய நிலையும் ஏற்படும்.
விற்பனை செய்யும்போது கவனிக்க வேண்டியவை
ஒரு காரை விற்பனை செய்யும்போது ஆர்சி எனப்படும் பதிவு சான்றிதழ் அசல் வைத்திருக்க வேண்டும்.
மாசுக் கட்டுப்பாட்டுச் சான்றிதழ், தடையில்லா சான்றிதழ், முகவரிச் சான்றிதழ், கார் காப்பீட்டு சான்றிதழ், படிவம் 29 மற்றும் 30 ஆகியவற்றில், வாங்கியவர், விற்றவர் கையெழுத்துப் போட்டுக் கொடுக்க வேண்டும். முறைப்படி, காரை வாங்கியவர் பெயரில், கார் பதிவு செய்யப்பட வேண்டும். இதனை கார் விற்பனை செய்பவரும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போதுதான் ஒரு கார் விற்பனை முழுமை பெற்றதாக அர்த்தமாகும்.
ஆனால், தில்லி செங்கோட்டையில், கார் குண்டு வெடிப்பின் விசாரணையில், சதித் திட்டத்துக்குப் பயன்படுத்திய ஐ20 கார், பல உரிமையாளர்களைக் கொண்டிருக்கிறது. அனைவரும் விசாரணைக்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர்.
உண்மையில் அந்த வாகனம் பல கைகள் மாறி, ஒரு தவறான அமைப்பைச் சேர்ந்தவர்களிடம் சென்றுள்ளது. அதனை அவர்கள் வெடிகுண்டை வெடிக்க வைக்கப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இப்போது, காரின் உண்மையான உரிமையாளரை விசாரணை அதிகாரிகள் கைது செய்ய வேண்டும். ஆவணங்களில் பெயர் இருப்பவர்களோ, காரை விற்றுவிட்டதாகக் கூறுகிறார்கள். இப்போது விசாரணை தீவிரமடைகிறது. காரை விற்றவர்கள் பெயர் மாற்றம் செய்யாமல் இருந்ததால் சந்திக்கும் சிக்கல்கள் மோசமானவை. அவர்கள் நிரபராதிகள் என நிரூபிக்க காலம் ஆகலாம்.
ஒருவருக்கு காரை விற்பனை செய்யும் முன் செய்ய வேண்டியவை
கார் மீதான கடனை முடிப்பது.
கார் பதிவு செய்யப்பட்ட இடத்தில் அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
புதிதாக வாங்குபவர் பெயரில் காப்பீடு மாற்றப்பட வேண்டும்.
புதிய உரிமையாளர் பெயரில் கார் பதிவு செய்யப்பட வண்டும்.
ஆனால் நடப்பது என்ன?
காரின் உரிமையாளர் பெயரை மாற்றுவதில் தாமதம் நீடிக்கிறது. சில வேளைகளில் மாற்றப்படாமலே பயன்படுத்தப்படுகிறது.
இரண்டாம் தர கார்களை விற்பனை செய்யும் விற்பனையகங்கள், புதிய வாங்குபவர் கிடைக்கும்வரை, காரின் பழைய உரிமையாளர் பெயரை மாற்றுவதில்லை.
ஒருவேளை, காரை விற்றுவிட்டு, பெயர் மாற்றம் செய்யவில்லை என்றால், அந்த கார் ஏதேனும் போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்டாலோ, விபத்தில்சிக்கினாலோ பொறுப்பு பழைய உரிமையாளரைத்தான் சாரும்.
கார் புதிதாக வாங்குபவர் பெயரில் மாற்றம் செய்யப்பட்டுவிட்டால், அது தொடர்பான அனைத்து எஸ்எம்எஸ்-களும் புதிய உரிமையாளருக்கே வரும். அதுதான் மிகவும் பாதுகாப்பானது.
இது குறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறுகையில், சட்டப்படி, வாகனப் பதிவு யார் பெயரில் இருக்கிறதோ அவர்கள்தான் அதன் உரிமையாளர்கள். முறைப்படி, மண்டல போக்குவரத்து அலுவலகத்தில் பெயர் மாற்றம் செய்யப்படாவிட்டால், சட்டப்படி, விற்பனை செய்தவரே காரின் உரிமையாளராகத் தொடர்வார்.
எனவே, காரை வாங்கியவர்கள் ஏதேனும் தவறான நோக்கங்களுக்காகவோ, சட்டத்துக்கு விரோதமான காரியங்களுக்கோ பயன்படுத்தினார், காரின் பழைய உரிமையாளரே பொறுப்பேற்கும் நிலை ஏற்படலாம்.
பணப்பரிமாற்றம் மட்டுமல்ல...
ஒரு காரை வாங்குவது - விற்பனை செய்வது என்பது வெறும் பணப்பரிமாற்றம் மட்டுமல்ல. முறைப்படி ஆவணங்களை, புதிதாக வாங்குபவர் பெயரில் மாற்றிக் கொடுப்பதுதான். படிவம் 29-ஐக் கொடுத்து 15 நாள்களுக்குள் பெயர் மாற்றம் முடிக்க வேண்டும்.
காரை விற்பனை செய்பவர்தான், பெயர் மாற்றத்துக்கு உதவி செய்து, அது முழுமை பெறுவதை உறுதி செய்ய வேண்டும். அதற்காக படிவங்களை நிரப்பாமல் கையெழுத்துப் போடுவது போன்றவையும் தவறு.
காரை வாங்கியவருடன், பெயர் மாற்றம் நடக்கும் வரை, விற்பனை செய்தவர் தொடர்பில் இருந்து, அனைத்தையும் முடித்துக் கொடுக்க உதவ வேண்டும்.
காரை விற்பனை செய்தவர்கள் மட்டுமல்ல, வாங்குபவர்களும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள், தொடர்புடைய வாகனங்கள் போன்றவற்றை விற்கும் அபாயம் உள்ளது. எனவே, அனைத்தையும் உறுதி செய்துகொண்ட பிறகே வாகனத்தை வாங்க வேண்டும்.
எனவே, பயன்படுத்திய காரை விற்பனை செய்வதும், வாங்குவதும் மிகவும் கவனத்துடன் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள். சட்டப்படி அனைத்தையும் நிறைவு செய்தால், நம் வாகனம், நம் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.