இலங்கையில் கனமழை, நிலச்சரிவுக்கு பலியானேரின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித் அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், டிட்வா புயல் காரணமாக தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த இலங்கை மக்களுக்கு எனது இதயம் கனிந்த இரங்கல்கள். பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களும் விரைவில் மீண்டு வர என்னுடைய பிரார்த்தனைகள்.
‘ஆபரேஷன் சாகர் பந்துவின் கீழ், நிவாரணப் பொருட்கள் மற்றும் முக்கியமான மனிதாபிமான உதவிகளை இந்தியா அவசரமாக அனுப்பியுள்ளது. நிலைமை மேம்படவும் மேலும் உதவிகள் வழங்கவும் தயாராக இருக்கிறோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் கடந்த 10 நாள்களுக்கு மேலாக தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், தலைநகர் கொழும்பிலிருந்து கிழக்கே சுமார் 300 கிலோமீட்டர் (186 மைல்) தொலைவில் உள்ள மத்திய மலை மாவட்டங்களில் வியாழக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவுகளில் 25-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
நிலச்சரிவில் சிக்கி பலர் காணாமல் போய்விட்டனர் என்று அந்நாட்டின் பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது. பதுளை மற்றும் நுவரெலியா மாவட்டத்தில் மழை, நிலச்சரிவால் அதிகபட்சமாக 23 பேர் உயிரிழந்துள்ளனர். 21 பேர் காணாமல் போயுள்ளனர் மற்றும் 14 பேர் காயமடைந்துள்ளனர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவுகளில் மேலும் பலர் உயிரிழந்துள்ளனர். இதுவரை பலத்த மழை, நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ள நிலையில், 600-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.