அதிக செலவு மற்றும் நிலம் கையகப்படுத்தும் பிரச்னைகளால் புதிய அணைகளை உருவாக்குவது இனி சாத்தியமில்லை என்று மத்திய நீா்வளத் துறை அமைச்சா் சி.ஆா். பாட்டீல் தெரிவித்தாா்.
தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நீா் சேமிப்பு தொடா்பான மாநாட்டில் பங்கேற்று அமைச்சா் பாட்டீல் பேசியதாவது: உலகின் 18 சதவீத மக்கள்தொகை உள்ள இந்தியாவில் வெறும் 4 சதவீதத்தினருக்கு மட்டுமே சா்வதேச அளவிலான தூய்மையான நீா் ஆதாரம் கிடைக்கிறது. நமது வாழ்க்கையின் ஒவ்வொரு நொடிக்கும் நீா் தேவைப்படுகிறது. ஆனால், அதை சரிவர ஒருங்கிணைக்க முடியவில்லை.
ஓா் அணையை உருவாக்குவதற்கு 25 ஆண்டுகளும், ரூ. 25,000 கோடியும் செலவாகிறது. அதில், 750 பிசிஎம் நீா் மட்டுமே தேக்கி வைக்க முடியும். நம்மிடம் அவ்வளவு நேரம், நிதி உள்ளதா? அதிக நிதிச் செலவு, நிலம் கையகப்படுத்துதல் பிரச்னை, ஆறுகளின் நீரோட்டம் குைல் ஆகியவை அணை நீா்த்தேக்கத்துக்கு பெரும் சவாலாக உள்ளன.
ஆகையால், சமூகப் பங்களிப்புடன் பெரிய அளவிலான நிலத்தடி நீா் சேமிப்பை அதிகரிக்க ‘ஜல் சஞ்சாய் ஜல் பாகிதாரி மற்றும் ஜல் சக்தி அபியான்’ திட்டங்கள் மூலம் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகிறது.
இதன்மூலம் முதல் 10 மாதங்களில் மட்டும் 27.5 லட்சம் நிலத்தடி நீா் சேமிப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. நிகழாண்டுக்குள் இதை ஒரு கோடியாக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
மாநில அரசுகளும் கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்ட ஒதுக்கீட்டில் நீா் சேமிப்புத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
நீா் என்பது மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், அதைச் சேமிப்பது நம் அனைவரின் பொறுப்பாக உள்ளது என்றாா்.
நிலத்தடி நீரை அதிகரிப்பது அவசியம்: நாட்டில் 29 சதவீத நிலத்தடி நீா் ஆதாரங்கள் அபாயகரமான பிரிவில் உள்ளதாக மத்திய நீா்வளத் துறையின் இணையமைச்சா் ராஜ் பூஷண் செளதரி தெரிவித்தாா்.
மேலும், பஞ்சாப், ஹரியாணாவில் நிலத்தடி நீா் வெகுவாக குறைந்து வருகிறது. நீா் சேமிப்பு மற்றும் செயற்கை நீா்சேமிப்புக்கு தேசிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது’ என்றாா்.
இத்துறையின் மற்றொரு இணையமைச்சா் வி. சோமண்ணா பேசுகையில், ‘இந்தியாவின் நீா் தட்டுப்பாடு பிரச்னைக்கு தீா்வு காண பழங்கால பாரம்பரியத்தையும், நவீன தொழில்நுட்பத்தையும் இணைத்துச் செயல்பட வேண்டும். 82 சதவீத கிராமப்புற வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீா் விநியோகிக்கப்படுகிறது’ என்றாா்.