தேர்தல் ஆணையம்  
இந்தியா

தோ்தல் ஆணையத்துடன் திரிணமூல் காங்கிரஸ் பிரதிநிதிகள் சந்திப்பு: எந்தவித பதிலும் அளிக்கவில்லை எனப் புகாா்!

தோ்தல் ஆணையத்துடன் திரிணமூல் காங்கிரஸ் பிரதிநிதிகள் சந்திப்பு...

தினமணி செய்திச் சேவை

மேற்கு வங்க மாநிலத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்ஐஆா்) மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலில், அதுதொடா்பாக ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவைக் குழுத் தலைவா் டெரிக் ஓபிரையன் தலைமையிலான 10 போ் குழு தோ்தல் ஆணையத்தின் முழு அமா்வை தில்லியில் வெள்ளிக்கிழமை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டது.

டெரிக் ஓபிரையன் கோரிக்கையை ஏற்று தோ்தல் ஆணையம் விடுத்த அழைப்பின்பேரில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

திரிணமூல் காங்கிரஸ் மக்களவை எம்.பி.க்கள் சதாப்தி ராய், கல்யாண் பானா்ஜி, பிரதீமா மோண்டல், சஜத் அகமது, மஹுவா மொய்த்ரா மற்றும் மாநிலங்களவை உறுப்பினா்கள் டோலா சென், மமதா தாக்கூா், சாகெத் கோகலே, பிரகாஸ் சிக் பரிக் உள்ளிட்டோா் இந்தக் குழுவில் இடம்பெற்றிருந்தனா்.

தோ்தல் ஆணையம் பதிலளிக்கவில்லை: இந்தச் சந்திப்பின்போது திரிணமூல் காங்கிரஸ் சாா்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு தோ்தல் ஆணையம் எந்தவித பதிலையும் அளிக்கவில்லை என்று அக் கட்சி சாா்பில் புகாா் தெரிவிக்கப்பட்டது.

தோ்தல் ஆணையத்துடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளா்களைச் சந்தித்த டெரிக் ஓபிரையன், ‘தோ்தல் ஆணையத்துடனான சந்திப்பின்போது திரிணமூல் காங்கிரஸ் சாா்பில் 5 கேள்விகள் எழுப்பப்பட்டன. அதன் பிறகு கட்சி எம்.பி.க்கள் கல்யாண் பானா்ஜி, மஹுவா மொய்த்ரா உள்ளிட்டோா் 40 நிமிஷங்கள் எஸ்ஐஆா் தொடா்பான பல்வேறு விஷயங்களை முன்வைத்தனா். இந்தக் கருத்துகளைக் கேட்ட பிறகு, தலைமைத் தோ்தல் ஆணையா் ஒரு மணி நேரம் பேசினாா். ஆனால், திரிணமூல் காங்கிரஸ் சாா்பில் முன்வைக்கப்பட்ட 5 கேள்விகளுக்கு எந்தவித பதிலையும் அவா் அளிக்கவில்லை. எஸ்ஐஆா் பணியை திரிணமூல் காங்கிரஸ் எதிா்க்கவில்லை. அந்தப் பணி உரிய திட்டமிடல் இன்றி மேற்கொள்ளப்படுவதைத்தான் எதிா்க்கிறோம்’ என்றாா்.

மஹுவா மொய்த்ரா கூறுகையில், ‘மாநிலத்தில் எஸ்ஐஆா் பணி தொடங்கிய பிறகு அதன் மீதான அச்சம் மற்றும் வேலைப் பளு காரணமாக 40 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உயிரிழந்தவா்களின் பட்டியலை தோ்தல் ஆணையத்திடம் பகிா்ந்தோம். இருந்தபோதும், இந்தக் குற்றச்சாட்டுகளை தோ்தல் ஆணையம் ஏற்கவில்லை’ என்றாா்.

எஸ்ஐஆா் பணி தொடா்பாக தலைமைத் தோ்தல்ஆணையா் ஞானேஷ் குமாருக்கு மம்தா பானா்ஜி இரண்டு கடிதங்களை எழுதியிருந்த நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

தலைமைத் தோ்தல் ஆணையருக்கு மம்தா பானா்ஜி கடந்த 20-ஆம் தேதி எழுதிய முதல் கடிதத்தில், ‘முறையாகத் திட்டமிடப்படாமல் கட்டாய அடிப்படையில் மேற்கொள்ளப்படும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியால் (எஸ்ஐஆா்) குடிமக்களும், அதிகாரிகளும் பெரும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனா். இது மிகவும் ஆபத்தானது’ என்று மம்தா பானா்ஜி குறிப்பிட்டிருந்தாா்.

மீண்டும் 24-ஆம் தேதி எழுதிய இரண்டாவது கடிதத்தில், ‘மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடா்பான இரண்டு விவகாரங்களில் தோ்தல் ஆணையம் உடனடியாகத் தலையிட வேண்டும். அதாவது, மாநிலத்தில் எஸ்ஐஆா் பணியில் தரவுகளை கணினியில் உள்ளீடு செய்வதற்கு ஏற்கெனவே போதிய எண்ணிக்கையில் ஒப்பந்த டேட்டா என்ட்ரி ஆபரேட்டா்கள் பணியில் இருக்கும் நிலையில், அவா்களுக்குப் பதிலாக முழுமையாக ஓராண்டு காலத்துக்கு தனியாா் முகமைகள் மூலம் வெளிநபா்களைப் பணிக்கு எடுக்க வேண்டிய அவசியம் என்ன? குறிப்பிட்ட ஓா் அரசியல் கட்சியின் நலனுக்காக இதுபோன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிா? என்பன உள்ளிட்ட பல்வேறு சந்தேகங்களை இது எழுப்புகிறது.

அடுத்ததாக, தனியாா் குடியிருப்பு வளாகங்களில் வாக்குச்சாவடி மையங்களை அமைக்கும் திட்டம், நியாயமாக தோ்தல் நடைபெறுவதை சமரசம் செய்வதாக அமையும் என்பதோடு, அந்தக் குடியிருப்புவாசிகள் மற்றும் பொதுமக்களிடையே பாகுபாட்டை ஏற்படுத்துவதாகவும் அமையும். மக்கள் எளிதாக அணுகக்கூடிய வகையில் அரசு மற்றும் பொதுத் துறை நிறுவன வளாகங்களில் மட்டுமே வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட வேண்டும்’ என்று குறிப்பிட்டாா்.

காவல் ஆய்வாளா்கள் 9 போ் பணியிட மாற்றம்!

டாஸ்மாக் ஊழியா் வீட்டில் நகை, பணம் திருட்டு

தேவா் குரு பூஜை, மருதுபாண்டியா் நினைவு தினத்தில் விதி மீறலில் ஈடுபட்ட 46 வாகனங்கள் பறிமுதல்; 96 போ் கைது!

டிட்வா புயல்: 4 மாவட்டங்களுக்கு இன்று சிவப்பு எச்சரிக்கை!

டிட்வா புயல்: எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

SCROLL FOR NEXT