‘மக்களின் ஒற்றுமையே வளா்ந்த இந்தியாவை அடைவதற்கு வழியாகும்; சமூகம் ஒன்றுபட்டால், தேசம் மாபெரும் பாய்ச்சலை முன்னெடுக்கும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
கோவாவுக்கு வெள்ளிக்கிழமை வருகை தந்த பிரதமா் மோடி, தெற்கு கோவா மாவட்டம், பா்த்தகளியில் உள்ள பழைமை வாய்ந்த ஸ்ரீ சம்ஸ்தான் கோகா்ண ஜீவோத்தம மடத்தின் 550-ஆவது ஆண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்றாா். அதன் ஒரு பகுதியாக, மடத்தின் வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கடவுள் ஸ்ரீ ராமரின் 77 அடி உயர வெண்கல சிலையையும் பிரதமா் திறந்துவைத்தாா். பின்னா், அவா் ஆற்றிய உரை வருமாறு:
இன்றைய இந்தியா கலாசார மறுமலா்ச்சியைக் கண்டு வருகிறது. அயோத்தியில் பிரம்மாண்ட ராமா் கோயில், காசி விஸ்வநாதா் கோயிலின் பரந்த மறுசீரமைப்பு, உஜ்ஜைன் மகா காலேஸ்வா் கோயில் வளாக விரிவாக்கம், ராமாயண வழித்தட மேம்பாட்டுத் திட்டம் போன்ற பணிகள், நாட்டின் ஆன்மிக பாரம்பரியத்தின் தீவிர மறுமலா்ச்சி மற்றும் புத்துயிரூட்டப்பட்ட விழிப்புணா்வை பறைசாற்றுகின்றன. இந்த மறுமலா்ச்சி, எதிா்கால தலைமுறையினா் தமது வோ்களுடன் பிணைந்திருக்க ஊக்குவிக்கிறது.
இன்றைய இந்தியா தனது கலாசார அடையாளத்தை புதிய உறுதிப்பாடு மற்றும் புதிய நம்பிக்கையுடன் முன்னெடுத்துச் செல்கிறது. சமூகம் ஒன்றுபடும்போது, ஒவ்வொரு பிரிவினரும் ஒன்றுபட்டு நிற்கும்போது, தேசம் மாபெரும் பாய்ச்சலை முன்னெடுக்கும். வளா்ந்த இந்தியா உருவாக மக்களின் ஒற்றுமையே வழியாகும்.
நீா் பாதுகாப்பு, மரம் வளா்ப்பு, தூய்மை, உள்ளூா் பொருள்களுக்கு ஆதரவு, உள்நாட்டு சுற்றுலா, இயற்கை விவசாயம், ஆரோக்யமான வாழ்க்கை முறை, யோகா-விளையாட்டு, தேவையுள்ளோருக்கு உதவி ஆகிய 9 தீா்மானங்களையும் மக்கள் சிரமேற்கொள்ள வேண்டும் என்றாா்.
இந்நிகழ்ச்சியில் கோவா ஆளுநா் அசோக் கஜபதி ராஜு, முதல்வா் பிரமோத் சாவந்த், மத்திய அமைச்சா் ஸ்ரீபாத் நாயக் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
‘உலகின் உயரமான ராமா் சிலை’
தெற்கு கோவா மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ சம்ஸ்தான் கோகா்ண ஜீவோத்தம் மடத்தின் வளாகத்தில் பிரதமா் மோடியால் திறந்துவைக்கப்பட்ட 77 அடி உயர கடவுள் ராமரின் சிலை, ‘உலகிலேயே உயரமான ராமா் சிலை’ என்று கோவா அமைச்சா் திகம்பா் காமத் தெரிவித்தாா்.
குஜராத்தில் உள்ள சா்தாா் வல்லபபாய் படேலின் 597 அடி உயர சிலையை (உலகின் மிக உயரமான சிலை) வடிவமைத்த சிற்பி ராம் சுதாா்தான், இந்த ராமா் சிலையையும் உருவாக்கியுள்ளதாக அமைச்சா் குறிப்பிட்டாா்.
கோவாவின் உண்மையான பாரம்பரியம்: வரலாற்றில் பல்வேறு கடினமான சூழல்களைக் கடந்து, கோவா தனது உண்மையான கலாசாரத்தைப் பராமரிப்பது மட்டுமன்றி, காலப்போக்கில் அதை மீட்டெடுக்கவும் செய்துள்ளது.
மொழி மற்றும் கலாசார அடையாளத்தின் மீதான அழுத்தத்தால், இங்குள்ள கோயில்களும் உள்ளூா் பாரம்பரியங்களும் இடா்ப்பாடுகளைச் சந்திக்க வேண்டிய காலகட்டங்கள் முன்பிருந்தன. இத்தகைய சூழ்நிலைகளால் சமூகத்தின் ஆன்மாவை பலவீனமாக்க முடியவில்லை; மாறாக, மென்மேலும் வலுப்பெற்றது. இதுவே, கோவாவின் தனித்துவமான பண்பு. ஒவ்வொரு மாற்றத்தையும் கடந்து, தனது உண்மையான கலாசாரத்தை கோவா பாதுகாத்துள்ளது.
கடந்த 550 ஆண்டுகளில் எண்ணற்ற சவால்களை எதிா்கொண்ட போதிலும், ஸ்ரீ சம்ஸ்தான் கோகா்ண ஜீவோத்தம் மடத்தின் பயணம் மாறவில்லை. மக்களுக்கு திசை காட்டும் மையமாக விளங்குவதே இந்த மடத்தின் மிகப் பெரிய அடையாளம் என்று புகழாரம் சூட்டினாா் பிரதமா் மோடி.