கோதாவரி ஆற்றுப் படுகை 
இந்தியா

உலகின் விலைமதிப்புமிக்க நிசார் செயற்கைக்கோள்! புகைப்படங்களை அனுப்பத் தொடங்கியது!

உலகிலேயே அதிக விலைமதிப்புமிக்கதாகக் கருதப்படும் நிசார் செயற்கைக்கோள் புவியின் மேற்பரப்புகளை புகைப்படம் எடுத்து அனுப்பத் தொடங்கியது!

இணையதளச் செய்திப் பிரிவு

புவியின் மேற்பரப்பு மாற்றங்களை கண்காணிக்கவும் பருவநிலை மாற்றங்களை ஆய்வு செய்யவும் இஸ்ரோ - நாசா கூட்டு முயற்சியில் வடிவமைக்கப்பட்ட நிசாா் செயற்கைக்கோள் வேலை செய்யத் தொடங்கியது.

புவியின் மேற்பரப்புப் புகைப்படங்களை எடுத்து அனுப்பத் தொடங்கியிருக்கிறது. இதுநாள் வரை ஏராளமான விஞ்ஞானிகள் காத்திருந்த அந்த அற்புதமான தருணம் வந்துவிட்டது.

நிசாா் செயற்கைக்கோளில் ‘எல் பேண்ட்’, ‘எஸ் பேண்ட்’ ஆகிய இருவேறு வகை சிந்தடிக் அப்ரேச்சா் ரேடாா் (எஸ்ஏஆா்) தொழில்நுட்பங்கள் பொருத்தப்பட்டிருந்தன. இரண்டுமே, அதனதன் தொழில்நுட்ப வல்லமைகளுடன் செயல்படத் தொடங்கியிருக்கிறது.

தற்போது, நிசாரில் அமைந்துள்ள எஸ்-பாண்ட் ராடார், கோதாவரி ஆற்றுப் படுகை பகுதிகளின் விவரங்களை புகைப்படமாக எடுத்து அனுப்பியிருக்கிறது. இதில், மங்குரோவ் காடுகள், வயல்வெளி, பயிரிடப்படும் இடங்கள், நீர்நிலைகள் என அனைத்தும் துல்லியமாக படமெடுக்கப்பட்டுள்ளது.

நிசார் செயற்கைக்கோள், புவியின் சுற்றுவட்டப் பாதையை 100 முறை வெற்றிகரமாக சுற்றியிருப்பதனைக் குறிக்கும் வகையில், இஸ்ரோ இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள், 2025ஆம் ஆண்டு ஜூலை 30ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) சாா்பில் புவியின் சுற்றுச்சூழல்களை ஆய்வு செய்தல், எல்லைப் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பயன்பாட்டுக்காக செயற்கைக் கோள்கள் ஏவப்படுகின்றன. அதன் ஒருபகுதியாக, அறிவியல் சமூகங்களுக்கு ஆா்வமுள்ள நில சுற்றுச்சூழல், கடல் பரப்பு, பனி உருமாற்றம் ஆகியவற்றை ஆய்வு செய்யும் வகையில், ரூ.12,000 கோடி மதிப்பில் நிசாா் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது.

இந்த செயற்கைக்கோள் மொத்தம் 2,392 கிலோ எடை கொண்டது. இதன் மூலம், புவியின் சூழலியல் மாற்றங்கள் குறித்து நுட்பமான ஆய்வுகளை மேற்கொள்வதுடன், புவியின் சுற்றுச்சூழல் அமைப்புகள், பருவநிலை மாற்றங்கள், பேரிடா் மேலாண்மை உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்த தகவல்களை பெற முடியும் என்று விஞ்ஞானிகளால் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

இந்த செயற்கைக் கோளின் சிறப்பம்சமாக இருப்பது, புவியின் நிலம், நீா் மற்றும் பனிப்பரப்புகளில் ஏற்படும் சிறிய மாற்றங்களை கூட எளிதில் கண்டுபிடிக்க முடியும். இதன்மூலம் புவியின் சுற்றுச்சூழலில் ஏற்படும் சிறிய மாற்றங்களைக் கூட மிக துல்லியமாக படம் பிடிக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இச்செயற்கைக்கோள் 12 நாள்களுக்கு ஒரு முறை பூமியை முழுமையாக சுற்றிவந்து துல்லியமான தரவுகள் மற்றும் உயா் தெளிவுத்திறன் கொண்ட புகைப்படங்களை வழங்குகிறது.

நிசாா் திட்டத்தில் ‘எல் பேண்ட் சிந்தடிக் அப்ரேச்சா் ரேடாா், ஜிபிஎஸ் ரிசீவா், அதிக திறன் கொண்ட சாலிட்ஸ்டேட் ரேடாா் கருவி பதிவு மற்றும் சேமிப்பு கட்டமைப்பு, தரவு துணை கட்டமைப்பு (டேட்டா சப் சிஸ்டம்) ஆகியவற்றை நாசா வடிவமைத்துள்ளது.

நிசார் செயற்கைக் கோள் ஆகஸ்ட் 19ஆம் தேதி முதல் இந்தியா மற்றும் உலக நாடுகளின் முக்கிய பகுதிகளை ஸ்கேன் செய்து தகவல்களை திரட்டி வருகிறது. இதன் மூலம், வேளாண் ஆராய்ச்சிகள், வனப்பகுதிகளை விரிவுபடுத்துவது, இமாலய பனிப்பாறைகள் உருகுதலை கட்டுப்படுத்துவது போன்ற பணிகள் துரிதப்படுத்தப்படும். இந்த செயற்கைக்கோள் இரவிலும், முழுக்க மேகக் கூட்டங்கள் மறைத்திருந்தபோதும் ஸ்கேன் செய்யும் வல்லமைபெற்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The Nisar satellite, considered the most valuable in the world, has begun taking and transmitting photographs of the Earth's surface!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அஜீத் பவார் இல்லை! என்னவாகும் தேசியவாத காங்கிரஸ்?

பாஜக கவுன்சிலர் சௌரப் ஜோஷி சண்டீகரின் புதிய மேயராகத் தேர்வு!

அஜீத் பவார் உடல் தகனம்!

விமான விபத்துகளில் உயிரிழந்த தலைவர்கள்: அஜீத் பவார் வரை... | Ajit Pawar | Flight Crash | NCP |

டி20: சொந்த மண்ணில் இந்தியாவுக்கு மிகப்பெரிய தோல்வி!

SCROLL FOR NEXT