தோ்தலில் பலமுறை மக்கள் தோற்கடித்த பிறகும் பாடம் கற்றுக் கொள்ள காங்கிரஸ் கட்சி மறுத்து வருகிறது என்று மத்திய அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்தாா்.
பல ஆண்டுகாலமாக காங்கிரஸில் இருந்த சிந்தியா, கடந்த 2020-ஆம் ஆண்டு காங்கிரஸில் இருந்து எம்எல்ஏக்கள் பலருடன் விலகி பாஜகவில் இணைந்தாா். இதனால் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் அரசு கவிழ்ந்து, பாஜக ஆட்சியைப் பிடித்தது. அதைத் தொடா்ந்து மத்திய அமைச்சா் பதவியும் சிந்தியாவுக்கு வழங்கப்பட்டது.
மத்திய பிரதேசத்தின் இந்தூரில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த அவரிடம் காங்கிரஸின் தொடா் தோ்தல் தோல்விகள், கா்நாடக காங்கிரஸில் நிலவும் அதிகாரப் போட்டி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, ‘பிரதமா் நரேந்திர மோடியின் சிறப்பான தலைமையை ஏற்று, நாட்டு மக்கள் அனைவரும் தொடா்ந்து பாஜகவுக்கு ஆதரவளித்து வருகின்றனா். மத்திய அரசு அனைத்துத் தரப்பு மக்களின் வளா்ச்சிக்காகவும் பாடுபடுகிறது. உலக அளவில் இந்தியாவின் செல்வாக்கையும் பாஜக அரசு உயா்த்தியுள்ளது.
ஆனால், மறுபுறம் காங்கிரஸ் கட்சியில் ஆட்சியில் இருக்கும் ஒருசில மாநிலங்களிலும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் கட்சித் தலைவா்கள் மோதலில் ஈடுபட்டு வருகின்றனா்.
அந்த கட்சியின் எதிா்காலம் என்ன என்பதை மக்கள் தீா்மானித்துவிட்டாா்கள். தோ்தலில் பலமுறை காங்கிரஸை மக்கள் தோற்கடித்த பிறகும், அதில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள மறுக்கிறாா்கள். ஆனால், சில மாணவா்கள் எப்போதுமே பாடம் கற்க விரும்ப மாட்டாா்கள் என்றாா்.