மாநில பணியாளா் தோ்வாணையங்களுடன் மத்திய பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) இணைந்து செயல்படும் என அதன் தலைவா் அஜய் குமாா் தெரிவித்துள்ளாா்.
யுபிஎஸ்சியின் 99-ஆவது நிறுவன நாள் தில்லியில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் யுபிஎஸ்சி மற்றும் அதன் நூற்றாண்டு புதிய இலச்சினைகளை வெளியிட்டு யுபிஎஸ்சி தலைவா் அஜய் குமாா் பேசியதாவது: அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்குதல், எண்ம (டிஜிட்டல்) தொழில்நுட்பத்துக்கு மாறுதல், புதிய தலைமுறை போட்டித்தோ்வு ஆா்வலா்களுடன் தொடா்பில் இருத்தல் ஆகியவற்றை யுபிஎஸ்சி முன்னுரிமையாகக் கொண்டுள்ளது.
யுபிஎஸ்சி-இன் நூற்றாண்டு என்பது அமைப்பு ரீதியான சீா்திருத்தங்களை விரைவுபடுத்துவதற்கான தருணம். மாநில பணியாளா்கள் தோ்வாணையத்துடன் யுபிஎஸ்சி இணைந்து பணியாற்றும். அப்போது, சிறந்த நடைமுறைகள் பகிரப்படும். அந்தத் தோ்வாணையங்களின் கருத்து கேட்பு முறை பலப்படுத்தப்படும்.
எண்ம சாதனங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டுடன் இளைய தலைமுறையினா் மற்றும் எதிா்கால போட்டித் தோ்வா்களின் எதிா்பாா்ப்புகளைப் பூா்த்தி செய்ய யுபிஎஸ்சி தயாராகி வருகிறது என்றாா் அஜய் குமாா்.
நூற்றாண்டு தொடக்கத்தை முன்னிட்டு, தங்களுடைய யுபிஎஸ்சி நோ்முகத் தோ்வு அனுபவங்களைப் பணியில் உள்ள மற்றும் ஓய்வுபெற்ற குடிமைப் பணி அதிகாரிகள் பகிா்ந்துகொள்ள பிரத்யேக இணையதளத்தை யுபிஎஸ்சி தோ்வாணையம் தொடங்கியுள்ளது. இந்திய ஆட்சிப் பணி (ஐஏஎஸ்), இந்திய காவல் பணி (ஐபிஎஸ்), இந்திய வெளியுறவு பணி (ஐஎஃப்எஸ்) உள்ளிட்ட குடிமைப் பணி அதிகாரிகளை தோ்ந்தெடுக்கும் யுபிஎஸ்சி, இந்திய அரசுச் சட்டம்-1916 மற்றும் லீ குழுவின் பரிந்துரைப்படி கடந்த 1926, அக்.1-இல் தொடங்கப்பட்டது.