முடா முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கில் ரூ. 40 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை திங்கள்கிழமை முடக்கியுள்ளது.
மைசூரு நிலமுறைகேடு விவகாரத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோர் மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த நிலையில், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் விதிகளின் கீழ், சில முடா தளங்கள் உள்பட 34 அசையா சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான தற்காலிக உத்தரவை அக்.4-ம் தேதி வெளியிடப்பட்டது. முடக்கப்பட்டிருக்கும் சொத்துகளின் மதிப்பு சுமார் ரூ. 40.08 கோடி என்று மத்திய புலனாய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதிய நடவடிக்கையின் அடிப்படையில், இந்த விசாரணையில் இதுவரை ரூ. 400 கோடி மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. முன்னதாக முடா வழக்கின் ஆணையர் ஜி.டி. திணேஷ் குமாரை அமலாக்கத்துறை செப்டம்பரில் கைது செய்தது. தற்போது நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அதாவது, சித்தராமையாவின் மனைவி பார்வதிக்குச் சொந்தமான 3.16 ஏக்கர் வளர்ச்சியடையாத நிலத்தை அரசு எடுத்துக்கொண்டு, நன்கு வளர்ச்சியடைந்த நகர்ப் பகுதியில் 38,284 சதுர அடி நிலத்தை வழங்கியதாகவும், இதனால் கர்நாடக அரசுக்கு ரூ.4 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் மாநில அரசால் அமைக்கப்பட்ட நீதிபதி பி. என். தேசாய் ஆணையம் சித்தராமையா மற்றும் அவரது குடும்பத்தினரை இந்த வழக்கிலிருந்து விடுவித்துள்ளது.
லோக் ஆயுக்த காவல்துறையும் சித்தராமையா, அவரது மனைவி பார்வதி மற்றுமுள்ள இருவர் மீது ஆதாரம் இல்லாததால் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க இயலவில்லை என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.