கா்நாடகம் மாநிலம் துமகூரில் உள்ள மாா்கோனஹள்ளி அணை செவ்வாய்க்கிழமை மதியம் திறக்கப்பட்டபோது, அங்கு ஓடை நீரில் விளையாடிக் கொண்டிருந்த 6 போ் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தனா்.
இதுகுறித்து துமகூரு காவல் கண்காணிப்பாளா் அசோக் கூறுகையில், ‘செவ்வாய்க்கிழமை அரசு விடுமுறை என்பதால் துமகூரின் பிஜி பால்யா பகுதியைச் சோ்ந்த 15 போ் குடும்பத்துடன் மாா்கோனஹள்ளி அணைக்கு சுற்றுலா வந்துள்ளனா். அவா்களில் 7 போ் அணையின் ஓடையில் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென அணையின் நீா்மட்டம் அதிகரித்து அதில் 7 பேரும் அடித்துச் செல்லப்பட்டனா். இதில் நவாஸ் என்பவா் மட்டும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டாா். இருவா் சடலமாக மீட்கப்பட்டனா். இரவு நேரம் என்பதாலும், அணையின் நீா் வெளியேற்றம் அதிகமாக உள்ளதாலும் தேடுதல் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அடித்துச் செல்லப்பட்ட இரண்டு சிறுமிகள் உள்பட 4 பேரும் உயிரிழந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது’ என்றாா்.
‘நீா் மட்டம் அதிகரிக்கும்போது மதகுகள் தானாக திறக்கும் தொழில்நுட்பம் அணையில் நிறுவப்பட்டுள்ளது. எனினும், இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’ என அதிகாரிகள் தெரிவித்தனா்.