பிகாரைச் சேர்ந்த பாடகி மைதிலி தாக்குர், அங்கு நடைபெறவுள்ள பேரவைத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிகார் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இரண்டு கட்டங்களாக நவம்பர் 6 மற்றும் 11 ஆம் தேதிகளில் நடைபெறும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் நேற்று அறிவிப்புகளை வெளியிட்டார்.
இந்த நிலையில், பிகாரைச் சேர்ந்த பிரபல நாட்டுப்புற பாடகியும், பக்திப் பாடல்கள் பாடுவதில் வல்லவரான மைதிலி தாக்குர் இன்று (அக்.7) பாஜக தலைவர்களைச் சந்தித்த நிகழ்வு பிகார் மட்டுமின்றி இந்தியளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
பிகாரின் மதுபானி பேரவைத் தொகுதியைச் சேர்ந்தவரான மைதில் அவரது தந்தையுடன் இணைந்து பிகார் மாநில பாஜக பொறுப்பாளர் வினோத் தாவடே மற்றும் மத்திய உள்துறை இணையமைச்சர் நித்தியநாத் ராய் உள்ளிட்டோருடன் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டதன் மூலம் அவர் தேர்தலில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து மைதிலி தாக்குரிடம் தேர்தலில் போட்டியிடுவீர்களா? என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், “இப்போதைக்கு இது குறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை. ஆனால், நாடுக்கு எது தேவையோ அதற்கு நான் பங்களிப்பேன்” என சூசகமாகப் பதிலளித்துள்ளார்.
யார் இந்த மைதிலி தாக்குர்?
பிகாரின் மதுபானி பேனிப்பட்டியில் 2000 ஆம் ஆண்டு பிறந்தவரான மைதிலி தாக்குர் (25) பிரபல நாட்டுப்புற பாடகியும், பக்திப் பாடல்கள் பாடுவதில் சிறப்புமிக்கவர்.
மைதிலி, பிகாரின் நாட்டுப்புற பாடல்களை ஊக்குவிப்பதற்காக 2021 ஆம் ஆண்டில் சங்கீத நாடக அகாடமியின் பிஸ்மில்லா கான் யுவ புரஸ்கார் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இவர், 2024 ஆம் ஆண்டு ஜனவரியில், ராமர் வனவாசத்தின் போது பாதி சாப்பிட்ட பழத்தை அவருக்கு காணிக்கையாக வழங்கிய வயதான துறவி மாதா சபரி பற்றி ஒரு பாடலைப் பாடியதற்காக மைதிலி தாக்குரை பிரதமர் மோடி பாராட்டியிருந்தார்.
அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழாவின் போது, மைதிலி பாடிய ஒரு பாடலைப் பகிர்ந்த பிரதமர் மோடி, “அயோத்தியில் பிராண பிரதிஷ்டை விழா, நாடு முழுவதும் உள்ளவர்களுக்கு பகவான் ராமரின் வாழ்க்கையில் நடந்த ஒவ்வொரு சம்பவத்தையும் நினைவூட்டுகிறது.
மைதிலி தனது மெல்லிசைகளால் பாடலை இயற்றியுள்ளார் பாருங்கள்” எனப் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.