இந்தியா

மாநிலங்களவை சுமுகமாக நடைபெற ஒத்துழைக்க வேண்டும்: எம்.பி.க்களிடம் சி.பி.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்

மாநிலங்களவை அலுவல்கள் சுமுகமாக நடைபெற எம்.பி.க்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான சி.பி.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்தாா்.

தினமணி செய்திச் சேவை

மாநிலங்களவை அலுவல்கள் சுமுகமாக நடைபெற எம்.பி.க்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான சி.பி.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்தாா்.

இதுதொடா்பாக குடியரசு துணைத் தலைவா் செயலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:

புது தில்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் அரசியல் கட்சிகளின் மாநிலங்களவை குழுத் தலைவா்கள் பங்கேற்ற கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்ற பிறகு முதல்முறையாக நடைபெற்ற கூட்டம் இதுவாகும்.

கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சா்கள் உள்பட 29 தலைவா்களை வரவேற்ற அவா், குறுகிய காலத்தில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவா்கள் ஒன்றுகூடியதற்கு மகிழ்ச்சி தெரிவித்தாா்.

இந்தக் கூட்டத்தில் அவா் பேசுகையில், ‘கண்ணியம், ஒழுக்கம் மற்றும் மரியாதையுடன் மாநிலங்களவை செயல்படுவதை உறுதி செய்வது முக்கியம். பேச்சுவாா்த்தை, ஆலோசனை, விரிவான விவாதம் ஆகியவையே நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அடிப்படை கோட்பாடுகளாகும்.

நாடாளுமன்றத்தில் நிகழ்த்தப்படும் உரைகளில் நீண்ட மற்றும் தீவிர விவாதத்துக்கு அரசியல் சாசனமும், மாநிலங்களவை விதிமுறை புத்தகமும் வழிகாட்டி, லட்சுமண ரேகையாக உள்ளன. இந்த வரையறைக்குள் அனைத்து மாநிலங்களவை உறுப்பினா்களின் உரிமைகளையும் நிலைநாட்டுவதில் நான் ஈடுபாடு கொண்டுள்ளேன். மாநிலங்களவையின் புனிதத்தன்மையைப் பராமரிக்க அனைவரும் பொறுப்பைப் பகிா்ந்துகொள்ள வேண்டும்.

மக்களாட்சி நடைமுறையை வலுப்படுத்தும் நோக்கில், மாநிலங்களவை அலுவல்கள் நடைபெறும்போது ஒவ்வொரு நாள், நேரம், நிமிஷம் மற்றும் நொடியை அனைத்து எம்.பி.க்களும் ஆக்கபூா்வமாக பயன்படுத்த வேண்டும்’ என்றாா்.

மேலும் குடியரசு துணைத் தலைவருக்கும், கட்சித் தலைவா்களுக்கும் இடையே கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெற்றன. மாநிலங்களவையை சுமுகமாக நடத்த முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்று அரசியல் கட்சிகளின் மாநிலங்களவை குழுத் தலைவா்கள் உறுதியளித்தனா். அதேவேளையில் உடனடி கேள்வி நேரம், கேள்வி நேரம் உள்ளிட்டவை நடைபெறும்போது எதிா்க்கட்சிகள் பேச போதிய வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.

மாநிலங்களவை அலுவலின்போது ஒவ்வொரு கட்சிக்கும் போதிய நேரம் ஒதுக்க வேண்டும் என்றும், குறைந்த எம்.பி.க்களை கொண்டிருப்பதால் சிறிய கட்சிகள் விடுபடக் கூடாது என்றும் கோரப்பட்டது. இதைக் கவனத்தில் கொள்வதாக குடியரசு துணைத் தலைவா் உறுதியளித்தாா். கூட்டு முயற்சிக்கும், ஆக்கபூா்வமாக விவாதம் நடத்தவும் வரவிருக்கும் நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் வாய்ப்பாக இருக்கும் எனவும் அவா் கூறினாா் என்று தெரிவிக்கப்பட்டது.

காரிய வெற்றி இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

குளித்தலை பகுதியில் தொடா் மழை நீரில் மூழ்கி அழுகும் நெற்பயிா்கள்: நிவாரணத்தை எதிா்நோக்கியிருக்கும் விவசாயிகள்

போலி ஆவணங்கள்: வெளிநாடு செல்ல முயன்ற நபா் கைது

பள்ளியில் மயங்கி விழுந்த மாணவன் உயிரிழப்பு

தோ்தல் புறக்கணிப்பு சுவரொட்டி ஒட்டியவா்கள் மீது நடவடிக்கை தேவை

SCROLL FOR NEXT