பிகார் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தொகுதிப் பங்கீட்டில் இழுபறி தொடர்ந்து வருகிறது. இதனால், மத்திய இணையமைச்சர் சிராக் பாஸ்வான் பிரசாந்த் கிஷோருடன் இணைந்து தேர்தலைச் சந்திக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிகார் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் 243 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு இரண்டு கட்டங்களாக நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
இந்த நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், லோக் ஜனசக்தி கட்சி(ஆர்வி) கட்சியின் தலைவரும், ராம்விலாஸ் பாஸ்வானின் அரசியல் வாரிசுமான சிராக் பாஸ்வான், 40 இடங்கள் வரை கேட்டுள்ளார். ஆனால், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் வெறும் 25 தொகுதிகள் மட்டுமே கொடுக்க முன்வந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மக்களவைத் தேர்தலில் 5 தொகுதிகளில் வெற்றிபெற்ற சிராஜ் பாஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி கட்சி, தொகுதி பங்கீட்டில் உடன்பாடு எட்டப்படவில்லை என்றால், ஜன்சுராஜ் கட்சியின் தலைவரும் பிரபல அரசியல் வியூக வகுப்பாளருமான பிரசாந்த் கிஷோருடன் கூட்டணி அமைக்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகியிருக்கின்றன.
பிகாருக்காக தேவைப்பட்டால் தனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்யக்கூடத் தயாராக இருப்பதாக சிராக் பாஸ்வான் தனது நெருங்கிய உதவியாளர்களிடம் கூறியுள்ளதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முதல்வர் நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக ஆகிய இரண்டு கட்சிகளும் 205 தொகுதிகளில் பாதிக்குப் பாதி போட்டியிட முடிவெடுத்துள்ளதாகவும், மீதமுள்ள 38 இடங்கள், லோக் ஜனசக்தி (ஆர்வி), பிகார் முன்னாள் முதல்வர் ஜித்ரன் ராம் மஞ்சி தலைமையிலான மதச்சார்பற்ற ஹிந்துஸ்தானி அவாமி மோர்ச்சா மற்றும் உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்ட்ரிய லோக் சமதா கட்சி போன்ற கூட்டணிக் கட்சிகளுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, லோக் ஜனசக்திக்கு 25 இடங்களையும், மதச்சார்பற்ற ஹிந்துஸ்தானி அவாமி மோர்ச்சாவுக்கு ஏழு இடங்களையும், ராஷ்டிரிய லோக் சம்தாவுக்கு ஆறு இடங்களையும் வழங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிராக் பாஸ்வானைப் பொறுத்தவரை, 'பிகார்தான் முதலில், பிகாரி என்பதும் முதலில்'.இதனால், அவர் ஷாஷாபாத் தொகுதியிலும் போட்டியிடலாம் என்றும் கூறப்படுகிறது.
பிகாரில் நிலவும் வேலையின்மை, 25 ஆண்டுகளாக பதவியில் இருக்கும் முதல்வர் நிதீஷ்குமார் மீதான அதிருப்தி, புலம்பெயர் மக்கள் போன்றவைகளை மையப்படுத்தி, பிரசாந்த் - சிராக் இருவரும் வாக்குகளை அறுவடை செய்ய முடிவு செய்துள்ளனர்.
நிதீஷுடன் ஒப்பிடுகையில், இளம் போட்டியாளர்களாகக் கருதப்படும் சிராக் பாஸ்வான் மற்றும் பிரசாந்த் கிஷோர் இருவரும் சேர்ந்தால் அது நிதீஷ்குமாருக்கு பெருத்த பின்னடைவாக அமையும் என்றும் கள நிலவரங்கள் கூறுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.