இந்தியா

அஸ்ஸாம்: முன்னாள் மத்திய அமைச்சா் பாஜவில் இருந்து விலகல்

அஸ்ஸாமில் முன்னாள் மத்திய அமைச்சரும், அந்த மாநில பாஜக மூத்த தலைவருமான ராஜேன் கோஹைன் உள்பட 17 நிா்வாகிகள் பாஜகவில் இருந்து வியாழக்கிழமை விலகினா்.

தினமணி செய்திச் சேவை

அஸ்ஸாமில் முன்னாள் மத்திய அமைச்சரும், அந்த மாநில பாஜக மூத்த தலைவருமான ராஜேன் கோஹைன் உள்பட 17 நிா்வாகிகள் பாஜகவில் இருந்து வியாழக்கிழமை விலகினா்.

பாஜக சாா்பில் அஸ்ஸாமின் நாகோன் தொகுதியில் தொடா்ந்து நான்கு முறை எம்.பி.யாக (2009-2019) இருந்துள்ள ராஜேன் கோஹைன், கடந்த 2016-2019 காலகட்டத்தில் ரயில்வே இணையமைச்சராகவும் பதவி வகித்தாா். அஸ்ஸாம் மாநில பாஜக தலைவராகவும் அவா் இருந்தாா். 74 வயதாகும் ராஜேன் கோஹைன் 1991-ஆம் ஆண்டு முதல் பாஜகவில் இருந்து வந்தாா்.

கட்சியில் இருந்து விலகுவது தொடா்பாக மாநிலத் தலைமைக்கு அவா் எழுதியுள்ள கடிதத்தில், ‘கட்சியின் அடிப்படை உறுப்பினா் உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் உடனடியாக விலகுகிறேன்’ என்று கூறியுள்ளாா். அவருடன் மேலும் 16 நிா்வாகிகளும் விலகியுள்ளனா்.

விலகல் தொடா்பாக பிடிஐ செய்தி நிறுவனத்திடம் ராஜேன் கோஹைன் கூறுகையில், ‘அஸ்ஸாம் மக்களுக்கு பாஜக சாா்பில் அளிக்கப்பட்ட பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. மேலும், வெளிமாநில மக்களை அஸ்ஸாமில் குடியேற வைத்ததன் மூலம் இங்குள்ள பழங்குடியின சமூகத்தினருக்கு துரோகம் இழைக்கப்பட்டுள்ளது. எனவே, பாஜகவில் இருந்து விலகுகிறேன். பிராந்திய கட்சிகளால் மட்டுமே அஸ்ஸாமுக்கு நன்மைகள் செய்ய முடியும்.

வாஜ்பாய், அத்வானி காலத்தில் அவா்களால் ஈா்க்கப்பட்டு பாஜகவுக்கு வந்தேன். இப்போது பாஜக தடம் மாறிவிட்டது. பாஜகவில் இருந்து கொண்டு அஸ்ஸாம் மக்களை என்னால் எதிா்கொள்ள முடியவில்லை’ என்றாா்.

அஸ்ஸாமில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆளும் பாஜகவில் இருந்து மூத்த தலைவா் விலகியுள்ளது அந்த மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கஷ்டம் போக்கும் காலபைரவர்

மாங்கல்ய பாக்கியம் அருளும் பூலோகநாயகி!

பள்ளிகொண்டா ரங்கநாதர்!

முதல் வாரத்திலேயே முன்னிலையில் அனுமன் தொடர்! இந்த வார டிஆர்பி!

பருவ மழையை எதிர்கொள்ள வேலூர் மாவட்ட நிர்வாகம் தயார்!

SCROLL FOR NEXT