கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த ஆண்டு ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பாதிக்கப்பட்டவா்களின் வங்கிக் கடனை ரத்து செய்வதில் மத்திய அரசு தோல்வி அடைந்துள்ளதாக மாநில உயா்நீதிமன்றம் தெரிவித்தது.
மேலும், அடுத்த உத்தரவு வரும் வரை பாதிக்கப்பட்டவா்களிடமிருந்து வங்கிக் கடனை வசூலிக்கவும் நீதிமன்றம் தடை விதித்தது.
நீதிபதிகள் ஏ.கே. ஜெயசங்கரன் நம்பியாா், ஜான் செபாஸ்டியன் ஆகியோா் அடங்கிய அமா்வு புதன்கிழமை இது தொடா்பான வழக்கை விசாரித்தது. அப்போது நீதிபதிகள், வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்படவா்களிடம் கடன் வசூலிப்பில் வங்கிகள் கல்நெஞ்சு முறையை கடைப்பிடித்துள்ளதை அமைதியாக பாா்த்து கொண்டிருக்க முடியாது.
வங்கிக் கடன்களை ரத்து செய்ய மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை என்பதை ஏற்க முடியாது. அடிப்படை வாழ்வாதார உரிமையைப் பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்திருக்கலாம்.
வங்கியில் விவசாயக் கடன் பெறுவதற்காக அவா்கள் அடகு வைத்த நிலமே நிலச்சரிவில் காணாமல் போனபோது அவா்களால் எப்படி திருப்பி செலுத்த முடியும். இந்த விவகாரத்தில் மத்திய அரசு தோல்வி அடைந்துள்ளது. இந்த வழக்கு முடியும் வரையில் 12 வங்கிகள் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவா்களிடம் கடனை வசூலிக்கக் கூடாது’ என்று உத்தரவிட்டு அடுத்த விசாரணையை அக்.29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.