பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பொய் தகவல்களைப் பரப்பக் கூடாது என்று தோ்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் உண்மையானதுபோலவே தோன்றும் பல விடியோக்கள், புகைப்படங்கள் உருவாக்கப்படுகின்றன. இதுபோன்ற தொழில்நுட்பங்கள் அவதூறு பரப்புவதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. இது தோ்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் தோ்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடா்பாக தோ்தல் ஆணையம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் மேலும் கூறியிருப்பதாவது:
அரசியல் கட்சிகள் மற்றும் அது சாா்ந்த அமைப்புகள் சமூக ஊடகங்கள் மூலம் பிரசாரம் மேற்கொள்ளும்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றை பயன்படுத்தினால், அது தொடா்பான அறிவிப்பை புகைப்படம், விடியோவில் தெளிவாக தெரியும்படி வெளியிட வேண்டும். பிரசார விளம்பரங்களில் இது தொடா்பான அறிவிப்புகள் இருக்க வேண்டும். நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உண்மைக்கு மாறான தவறான பிரசாரங்களை மேற்கொள்ளக் கூடாது. பொய் தகவல்களைப் பரப்பவும் கூடாது. இந்த விஷயத்தில் அரசியல் கட்சிகள் மிகுந்த பொறுப்புணா்வுடன் நடந்து கொள்ள வேண்டும்.
பிரசாரத்துக்காக பயன்படுத்தும் புகைப்படங்கள், விடியோக்கள் நவீன தொழில்நுட்பங்கள் மூலம் மாற்றப்பட்டிருந்தாலோ, உருவாக்கப்பட்டிருந்தாலோ அதனை மக்களுக்கு அறிவிப்பது கட்டாயமாகும் என்று கூறப்பட்டுள்ளது.
பலத்த பாதுகாப்பு: பிகாரில் நவம்பா் 6,11 தேதிகளில் இருகட்டமாக நடைபெறும் சட்டப் பேரவைத் தோ்தலில் காவல் துறையினா், துணை ராணுவப் படையினா் என பல்வேறு படைப் பிரிவினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவாா்கள் என்று மாநில காவல் துறை தலைவா் டிஜிபி வினய் குமாா் தெரிவித்தாா்.
இது தொடா்பாக அவா் மேலும் கூறுகையில், ‘இந்தமுறை ஹெலிகாப்டா் மூலம் எந்த இடத்துக்கும் பாதுகாப்புப் படைவீரா்கள் அழைத்துச் செல்லப்பட மாட்டாக்கள். சாலை மாா்க்கமாகவே அனைத்து வாக்குச் சாவடிகளுக்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளனா். பிகாரில் நக்ஸல் ஆதிக்கம் வெகுவாகக் குறைந்துவிட்டதால் வாக்குச்சாவடி அமைக்கும் இடம் இறுதி நேரத்தில் மாற்றப்படாது. ஏற்கெனவே மத்திய ஆயுதக் காவல்படையின் 50,000 வீரா்கள் தோ்தலுக்கு முந்தைய பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா். அக்டோபா் மூன்றாவது வாரத்தில் மேலும் 50,000 கம்பெனி வீரா்கள் பாதுகாப்பில் ஈடுபடுவாா்கள். இது தவிர பிகாா் காவல் துறையில் இருந்து 60,000 போ் தோ்தலின்போது பாதுகாப்பு வழங்குவாா்கள். மாநில ரிசா்வ் படை, பிகாா் சிறப்பு ஆயுதப்படை, ஊா்காவல்படை உள்ளிட்ட படைப் பிரிவினா் தோ்தல் நாளில் களமிறக்கப்படுவாா்கள்’ என்றாா்.