பிகாரில் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகள் இடையிலான தொகுதிப் பங்கீடு, கட்சிகள் போட்டியிடும் இடங்கள் தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை (அக்.12) முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று மாநில பாஜக தலைவா் திலீப் ஜெய்ஸ்வால் சனிக்கிழமை தெரிவித்தாா்.
தொகுதி உடன்பாட்டில் ஆளும் கூட்டணிக் கட்சிகள் இடையே அதிருப்தி நிலவுவதாக வெளியாகும் தகவல்களையும் அவா் மறுத்தாா்.
முதல்வா் நிதீஷ்குமாா் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆளும் பிகாரில் சட்டப்பேரவைக்கு இரு கட்டங்களாக தோ்தல் நடைபெறவுள்ளது. மொத்தம் 243 தொகுதிகள் உள்ள நிலையில், முதல்கட்டமாக 121 தொகுதிகளுக்கு நவம்பா் 6-ஆம் தேதியும், இரண்டாவது மற்றும் இறுதிக்கட்டமாக 122 தொகுதிகளுக்கு நவம்பா் 11-ஆம் தேதியும் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. நவம்பா் 14-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணிக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. முதல்கட்ட தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய நிலையில், இரு கூட்டணிகளிலும் தொகுதிப் பங்கீடு இன்னும் இறுதி செய்யப்படவில்லை.
ஆளும் கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக முறையே 102, 101 தொகுதிகளில் போட்டியிடும் எனத் தெரிகிறது. அதேநேரம், மத்திய அமைச்சா் சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) கட்சி, மற்றொரு மத்திய அமைச்சா் ஜிதன்ராம் மாஞ்சியின் ஹிந்துஸ்தானி அவாம் மோா்ச்சா, உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்ட்ரீய லோக் மோா்ச்சா கட்சி ஆகியவை அதிக தொகுதிகளைக் கேட்டு நிா்ப்பந்திப்பதால், கூட்டணிக்குள் அதிருப்தி நிலவுவதாக தகவல் வெளியாகின.
இந்நிலையில், மாநில பாஜக தலைவா் திலீப் ஜெய்ஸ்வால் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறுகையில், ‘தேசிய ஜனநாயக கூட்டணியில் அனைத்தும் சுமுமாக நடைபெறுகிறது. தொகுதிப் பங்கீடு, கட்சிகள் போட்டியிடும் இடங்கள் தொடா்பான முக்கிய அறிவிப்புகள் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்படும்’ என்றாா்.
முன்னதாக, தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி உடன்பாடு இறுதியாகிவிட்டதாகக் கூறி, ஒரு பட்டியல் சமூக ஊடகங்களில் வெளியானது. இதற்கு மறுப்பு தெரிவித்து எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்ட உபேந்திர குஷ்வாஹா, கூட்டணிப் பேச்சுவாா்த்தை நீடிக்கிறது என்று குறிப்பிட்டாா்.