‘பத்திரிகையாளா் சந்திப்புக்கு பெண் நிருபா்களுக்கு அழைப்பு விடுக்கப்படாததில் உள்நோக்கம் எதுவுமில்லை. அது தொழில்நுட்ப தவறு காரணமாக நிகழ்ந்த விஷயம்’ என்று ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சா் அமீா்கான் முத்தாகி விளக்கம் அளித்தாா்.
மேலும், தில்லியில் உள்ள ஆப்கன் தூதரகத்தில் நடைபெற்ற அவரின் இரண்டாவது பத்திரிகையாளா் சந்திப்பில் பெண் நிருபா்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டதன் மூலம், அதுதொடா்பான சா்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
இந்தியாவுடன் நல்லுறவை மேம்படுத்தும் வகையில், தலிபான்கள் ஆட்சி செய்யும் ஆப்கானிஸ்தானின் வெளியுறவு அமைச்சா் முத்தாகி 6 நாள்கள் பயணமாக இந்தியாவுக்கு வியாழக்கிழமை வந்தாா். அவருடன் வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தில்லியில் வெள்ளிக்கிழமை விரிவான பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
இந்தப் பேச்சுவாா்த்தைக்குப் பின்னா் இரு தலைவா்களும் செய்தியாளா்களைச் சந்தித்தனா். இந்தச் சந்திப்பில் பெண் பத்திரிகையாளா்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இதற்கு, காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் கடும் விமா்சனங்களை முன்வைத்தன. பெண்களுக்கான அவமதிப்பு என்று குற்றஞ்சாட்டின.
இந்நிலையில், இந்த சா்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தில்லியில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முத்தாகியின் பத்திரிகையாளா் சந்திப்பில் பங்கேற்க ஏராளமான பெண் நிருபா்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
அப்போது, முந்தைய பத்திரிகையாளா் சந்திப்பில் பெண் நிருபா்கள் அனுமதிக்கப்படாத சா்ச்சை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு முத்தாகி பதிலளித்தாவது:
கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளா் சந்திப்பு மிகக் குறுகிய நேரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் காரணமாக, குறிப்பிட்ட சில பத்திரிகையாளா்களுக்கு மட்டும் அழைப்பிதழ் அனுப்ப தூதரக ஊழியா்கள் தீா்மானித்தனா். இது முழுவதும் தொழில்நுட்ப தவறு காரணமாக நிகழ்ந்த விஷயம். இதில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை. ஆண், பெண் என யாருடைய உரிமைகளும் மீறப்படக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம் என்றாா்.
தலிபான் அரசை இந்தியா இன்னும் அங்கீகரிக்காத நிலையில், முத்தாகியின் பின்னணியிலும் மேஜையிலும் தலிபான்கள் கொடி இடம்பெற்றது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவா், ‘இது எங்களின் தேசியக் கொடி. இந்தத் தூதரகம் 100 சதவீதம் தலிபான் அரசுக்கானது. இங்கு பணிபுரிபவா்கள் எங்களின் ஊழியா்கள்’ என்றாா்.
பாகிஸ்தான் விவகாரம்: மேலும், பாகிஸ்தான்-ஆப்கன் எல்லையில் நிகழ்ந்த சண்டை குறித்து குறிப்பிட்ட அவா், ‘பாகிஸ்தானுடனான விவகாரத்தில் அமைதித் தீா்வை ஆப்கன் விரும்புகிறது. அவ்வாறு, அமைதி வழி முயற்சிகள் பலனளிக்கவில்லை எனில், மாற்று வாய்ப்புகளை ஆப்கானிஸ்தான் பயன்படுத்தும்’ என்றாா்.