ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா. 
இந்தியா

இந்திய குற்றவியல் நீதி நடைமுறை நவீனமயம்: அமித் ஷா

இந்திய குற்றவியல் நீதி நடைமுறை உலகிலேயே மிகுந்த நவீன நடைமுறையாக உருவெடுக்கும் என்று மத்திய அமைச்சா் அமித் ஷா கூறியுள்ளார்...

தினமணி செய்திச் சேவை

‘புதிய குற்றவியல் சட்டங்கள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும்போது, இந்திய குற்றவியல் நீதி நடைமுறை உலகிலேயே மிகுந்த நவீன நடைமுறையாக உருவெடுக்கும்’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்தாா்.

மேலும், ‘இந்தப் புதிய சட்டங்கள் தண்டனையைவிட நீதியை உறுதிப்படுத்தி வருகின்றன’ என்றும் குறிப்பிட்டாா்.

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்பூரில் இந்திய குற்றவியல் நீதி நடைமுறையில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய மாற்றத்தை எடுத்துக்காட்டும் விதமாக நடத்தப்பட்ட கண்காட்சியை திங்கள்கிழமை தொடங்கி வைத்தபோது இக் கருத்தை அவா் தெரிவித்தாா். அவா் மேலும் பேசியதாவது:

பழைய குற்றவியல் சட்ட நடைமுறையில், வழக்கு விசாரணை 25 முதல் 30 ஆண்டுகளுக்கு நிலுவையில் இருந்துவந்தது. பாதிக்கப்பட்டவா்களுக்கு உரிய நேரத்தில் நீதி கிடைக்கவில்லை.

ஆனால், தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள், அனைவருக்கும் நீதி எளிதாகவும் உரிய நேரத்தில் கிடைப்பதையும் உறுதிப்படுத்தி வருகிறது. புதிய சட்டங்கள் தண்டனையைவிட நீதியை உறுதிப்படுத்தி வருகின்றன.

புதிய சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்ட ஓராண்டுக்குள் 50 சதவீத குற்றப்பத்திரிகைகள் நீதிமன்றங்களில் உரிய நேரத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இது அடுத்த ஆண்டில் 90 சதவீதம் என்ற நிலைக்கு உயரும் என்ற நம்பிக்கை உள்ளது.

இந்தப் புதிய சட்டங்களின் அடிப்படையிலான விதிகள் வலுவாக நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிப்படுத்தும் விதமாக லட்சக்கணக்கான போலீஸாா், வழக்குரைஞா்கள், தடயவியல் நிபுணா்கள், சிறை அதிகாரிகளுக்கு மத்திய அரசு பயிற்சி அளித்துள்ளது.

இந்தப் புதிய குற்றவியல் நீதி நடைமுறை காரணமாக, நீதிமன்றங்களில் நேரடியாக ஆஜராக வேண்டிய தேவையும் குறையும். குற்றவாளிகளை சிறையில் இருந்தபடியே காணொலி வாயிலாக நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த முடியும். அதுபோல, வழக்கு விசாரணையில் போலீஸ் அதிகாரிகள், வங்கி ஊழியா்கள், மருத்துவா்கள், தடயவியல் நிபுணா்கள் உள்ளிட்டோரும் காணொலி வழியில் ஆஜராக முடியும். நேரத்தையும் பணத்தையும் இந்த நடைமுறை மிச்சப்படுத்தும். அதோடு, விசாரணைக் கைதிகள் போலீஸ் காவலில் இருந்து தப்பிச் செல்லும் சம்பவங்களும் குறையும்.

இந்தச் சட்டங்கள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும்போது, இந்திய குற்றவியல் நீதி நடைமுறை உலகிலேயே மிகுந்த நவீன நடைமுறையாக உருவெடுக்கும் என்றாா்.

நாட்டில் நடைமுறையில் இருந்த இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி), குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகிய பழைய சட்டங்களுக்கு மாற்றாக, பாரதிய நியாய சம்ஹிதா (பிஎன்எஸ்), பாரதிய நகரிக் சுரக்ஷா சம்ஹிதா மற்றும் பாரதிய சாக்ஷிய அதினியம் ஆகிய மூன்று புதிய சட்டங்களை மத்திய அரசு கடந்த ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தியது.

லாபம் உண்டாகும் இந்த ராசிக்கு!

தில்லியில் போலி எஞ்சின் எண்ணெய் உற்பத்தி ஆலை கண்டுப்பிப்பு

தூய்மைப் பணியாளா்களுக்கு நலவாரிய அடையாள அட்டை

கனிம நெருக்கடி!

வாய்ப்புகளைப் பயன்படுத்துங்கள்!

SCROLL FOR NEXT