நமது நிருபர்
தில்லியில் உள்ள தெற்காசிய பல்கலைக்கழகத்தின் (எஸ்ஏயு) வளாகத்தில் மாணவி ஒருவர் நான்கு பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இந்தச் சம்பவத்தைக் கண்டித்து சக மாணவர்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து தெற்குதில்லி காவல் சரக துணை ஆணையர் அங்கித் சிங் கூறியதாவது: காணாமல் போனதாகக் கூறப்பட்ட மாணவி ஒரு நாள் கழித்து, அக்.13-ஆம் தேதி பல்கலைக்கழக வளாகத்தில் காயமடைந்து, ஆடைகள் கிழிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டார். இதுகுறித்து திங்கள்கிழமை பிற்பகல் 3 மணியளவில் மைதான் காரி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, ஒரு போலீஸ் குழு உடனடியாக அந்த இடத்தை அடைந்தது. வளாகத்துக்குள் சோதனை நடத்திய பின்னர் பல்கலைக்கழக கலையரங்கம் அருகே அந்த மாணவி கண்டுபிடிக்கப்பட்டார். மருத்துவப் பரிசோதனைக்காக அவர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
கலையரங்கம் அருகே 4 பேர் தன்னை இழுத்துச் சென்றதாக அந்த மாணவி போலீஸாரிடம் தெரிவித்தார். பல்கலைக்கழக வளாகத்தின் சிசிடிவி காட்சிகளை ஒப்படைக்குமாறு பல்கலைக்கழக நிர்வாகத்திடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மாணவியின் தந்தை பிகாரில் வசிக்கிறார். அவரது தாயார் மும்பையில் வசிக்கிறார்.
திங்கள்கிழமை மாலை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் வெளியானபோது, மாணவர்கள் கூடி 8 மணி நேரத்துக்கும் மேலாக உள்ளிருப்புப் போராட்டத்தை நடத்தினர் என்றார் அங்கித் சிங்.
தெற்காசிய பல்கலைக்கழகம் சார்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தெற்காசிய பல்கலைக்கழகம் இந்த பாலியல் வன்முறைச் செயலை கடுமையாகவும் ஒரே குரலிலும் கண்டிக்கிறது. நாங்கள் எங்கள் மாணவர்களுடன் நிற்கிறோம். எங்கள் முழு ஆதரவையும் அவர்களுக்கு அளிக்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.