டிஜிட்டல் பணப்பரிமாற்றம் எனும் தொழில்நுட்பத்துடனே, பாதுகாப்பான டிஜிட்டல் பணப்பரிமாற்றமும் உறுதி செய்யப்பட வேண்டியது அவசியம்.
டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தில் உள்ள சிக்கல்கள், பாதுகாப்பான பயன்பாடு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து காவல்துறை வெளியிடும் விழிப்புணர்களை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். மேலும், தங்களுக்குத் தெரிந்த தகவல்களை நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும்.
சைபர் பாதுகாப்பு குறித்து அடிக்கடி எழுப்பப்படும் கேள்வி - பதில்கள்
சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு என்றால்?
சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு என்பது, சைபர் மோசடியாளர்களிடம் இருந்து தப்பிப்பது குறித்த அறிவு, திறமையை வளர்ப்பது, சைபர் மோசடியாளர்களை எவ்வாறு எதிர்கொள்வது, அவர்களிடம் இருந்து தற்காத்துக் கொள்வது, மோசடி பற்றிய விழிப்புணர்வுகள், கணினி மற்றும் செல்போனை பாதுகாப்பாகக் கையாள்வது போன்றவற்றை அறிவது.
சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வின் அவசியம் என்ன?
அண்மைக் காலமாக சைபர் தாக்குதல்கள் அதிகமாக நிகழ்வதால், அதிநவீன முறையில் மோசடிகள் மாறி வருவதால், தனிநபர்களும் நிறுவனங்களும் தங்களுக்கு உள்ள அச்சுறுத்தல்கள் பற்றி அறிந்து, அதிலிருந்து தற்காத்துக் கொள்வது எப்படி என்பது குறித்து விழிப்புடன் இருப்பது மிகவும் முக்கியமானது. இல்லையென்றால், சிறு சேமிப்புத் தொகையையும் இழக்க நேரிடலாம்.
எவ்வாறு விழிப்புணர்வு அடைய வேண்டும்?
நாட்டில் நடக்கும் சைபர் குற்றங்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் பற்றி அறிந்திருக்க வேண்டும். தற்காத்துக் கொள்வதில் உள்ள சிறந்த நடைமுறைகள் குறித்தும் அறிந்திருத்தல் அவசியம்.
வங்கிக் கணக்கு உள்ளிட்டவற்றுக்கு வலுவான மற்றும் தனித்துவமான பாஸ்வேர்டுகளைப் பயன்படுத்துதல், சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல்கள் அல்லது எஸ்எம்எஸ் குறித்து எச்சரிக்கையாக இருப்பது போன்றவற்றின் விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொள்ளலாம்.
பொதுவான சைபர் மோசடிகள் என்ன?
தனிநபர் திருட்டு, வங்கிக் கணக்குத் திருட்டு, செல்போனை ஹேக் செய்தல், செயலியை பதிவிறக்கம் செய்ய வைப்பது, தொலைபேசி அழைப்பு மூலம் ஓடிபி போன்றவற்றைப் பெற்று மோசடி, சமூக வலைத்தளத்தில் போலி கணக்குகளை உருவாக்கி மோசடி போன்ற பல வகைகளில் நடக்கின்றன.
தனிநபர் தகவல்களை பாதுகாப்பது எப்படி?
ஒருவர், தனது தனிநபர் தகவல்களை பாதுகாக்க வேண்டும் என்றால், செல்போன் அல்லது கணினியில் வரும் சிஸ்டம் மற்றும் மென்பொருள் அப்டேட்களை முறையாக மேற்கொள்ள வேண்டும். பொதுவிடங்களில் வைஃபை பயன்படுத்துவதை தவிர்த்தல் நலம். ஒரு பாஸ்வேர்ட் மட்டும் வைத்திராமல் இரு முறைகளில் உறுதி செய்யும் மல்டி-ஃபேக்டர் ஆத்தன்டிகேஷன் முறைகளைப் பயன்படுத்தலாம்.
சைபர் குற்றவாளிகளால் ஏமாற்றப்பட்டால் என்ன செய்வது?
ஒருவேளை, சைபர் குற்றவாளிகளால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தால், உடனடியாக இது குறித்து புகார் அளிக்க வேண்டும்.
ஒருவேளை, யாரேனும் வங்கிக் கணக்கைத் திறக்க முயன்றது குறித்து செய்திகள் வந்தால், வங்கிக் கணக்கு பாஸ்வேர்டுகளை மாற்றலாம். வங்கிக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கலாம்.
ஒருவேளை சைபர் குற்றத்துக்கு இலக்காக நேரிட்டால், அழையுங்கள் உதவி எண் 1930. இதுபோன்ற சைபர் மோசடி குறித்த புகார்களை www.cybercrime.gov.in என்ற இணையதளத்திலும் புகார் அளிக்கலாம். பண மோசடியாக இருப்பின், உடனடியாக புகார் அளித்தால் பணத்தை மீட்பது எளிதாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.