மகாராஷ்டிர முதல்வர் ஃபட்னவீஸ் முன்னிலையில் 61 நக்சல்கள் சரணடைந்தனர் படம் - ANI
இந்தியா

மகாராஷ்டிரம்: ரூ.6 கோடி வெகுமதி அறிவிக்கப்பட்ட நக்ஸல் தலைவர் சரண்

மகாராஷ்டிரத்தில் நக்சல்களின் தளபதி உள்பட 61 பேர் சரணடைந்துள்ளது குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

மகாராஷ்டிரம்-சத்தீஸ்கரில் பல்லாண்டுகளாக நக்ஸல் தீவிரவாதத்தை வளர்த்த முக்கியத் தலைவர் மல்லோஜுலா வேணுகோபால் ராவ் எனும் பூபதி உள்பட 61 நக்ஸல்கள், முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் முன்னிலையில் புதன்கிழமை சரணடைந்தனர்.

பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய நக்ஸல் தலைவர் பூபதி, காவல் துறையினரால் மொத்தம் ரூ.6 கோடி வெகுமதி அறிவிக்கப்பட்டு, தேடப்பட்டவர் ஆவார். அவர் ஆயுதங்களைக் கைவிட்டு சரணடைந்திருப்பது, நக்ஸல் அமைப்புக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

வரும் மார்ச் மாதத்துக்குள் நாட்டில் நக்ஸல் தீவிரவாதத்தை ஒழிக்க மத்திய அரசு இலக்கை நிர்ணயித்து பல்வேறு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது.

54 ஆயுதங்களுடன் சரண்: இந்தச் சூழலில், மகாராஷ்டிரம்-சத்தீஸ்கரில் நக்ஸல் தீவிரவாதத்தின் தடை செய்யப்பட்ட அமைப்பான மக்கள் போர்க் குழுவின் நிறுவனர்களில் ஒருவரான பூபதி உள்பட 61 நக்ஸல்கள், கட்ச்ரோலியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் முன்னிலையில் சரணடைந்தனர். ஏகே 47, இன்சாஸ் ரக துப்பாக்கிகள் உள்பட 54 ஆயுதங்களையும் அவர்கள் ஒப்படைத்தனர்.

69 வயதாகும் பூபதி, நக்ஸல் தீவிரவாதத்தின் முக்கிய வியூகதாரியாவார். நக்ஸல் எதிர்ப்பு நடவடிக்கைகள், நக்ஸல் தலைவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு உள்ளிட்ட காரணங்களால் ஆயுதங்களைக் கைவிட்டு சரணடைய முடிவு செய்த அவர், துண்டு பிரசுரங்கள் வாயிலாக தனது விருப்பத்தை வெளியிட்டார். இதையடுத்து, காவல் துறை அதிகாரிகளுடன் சுமார் ஒரு மாத காலம் நடைபெற்ற திரைமறைவு பேச்சுவார்த்தைகளின் விளைவாக பூபதி உள்பட 61 நக்ஸல்கள் சரணடைய ஏற்பாடு செய்யப்பட்டது.

நக்ஸல் வீழ்ச்சியின் தொடக்கம்: இந்நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஃபட்னவீஸ், "மூத்த நக்ஸலைட் பூபதி சரணடைந்திருப்பது, நக்ஸல் தீவிரவாத வீழ்ச்சியின் தொடக்கமாகும்.

மகாராஷ்டிரம், சத்தீஸ்கரில் இன்னும் சிறிதளவு நக்ஸல்களே உள்ளனர். அவர்களும் சரணடைய வேண்டும்.

இல்லையெனில், பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இந்த இரண்டைத் தவிர வேறுவாய்ப்பில்லை. அரசமைப்புச் சட்டத்துக்கு இணங்கி, சமூக அமைப்புமுறையில் இணைவதன் மூலமே நீதி மற்றும் சமத்துவத்தை எட்ட முடியும். தாங்கள் சித்தாந்தப் போரில் தோற்றுவிட்டதை நக்ஸல்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். சரணடையும் நக்ஸல்களின் கண்ணியமான மறுவாழ்வு உறுதி செய்யப்படும்' என்றார்.

சத்தீஸ்கரில் 78 பேர் சரண்

கான்கர், அக். 15: சத்தீஸ்கரின் கான்கர் மாவட்டத்தில் 50 நக்ஸல்கள், சுக்மா மாவட்டத்தில் 27 நக்ஸல்கள், கோண்டாகான் மாவட்டத்தில் ஒரு நக்ஸல் என மொத்தம் 78 பேர், ஆயுதங்களுடன் புதன்கிழமை சரணடைந்தனர்; இவர்களில் 42 பேர் பெண்களாவர்.

சுக்மாவில் சரணடைந்த நக்ஸல்கள், மொத்தம் ரூ.50 லட்சத்துக்கும் மேல் வெகுமதி அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்தவர்கள். சரணடைந்தவர்களுக்கு உடனடி நிதியுதவியாக ரூ.50 ஆயிரமும், அரசின் கொள்கைப்படி மறுவாழ்வுக்கான உதவிகளும் வழங்கப்படும் என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.

312 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

மத்திய உள்துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், "நடப்பாண்டில் பாதுகாப்புப் படையினர் இதுவரை மேற்கொண்ட நடவடிக்கைகளில் சுட்டுக் கொல்லப்பட்ட நக்ஸல்களின் எண்ணிக்கை 312. கைதானவர்கள் 836 பேர், சரணடைந்தவர்கள் 1,639 பேர். மகாராஷ்டிரம், சத்தீஸ்கரில் 130-க்கும் மேற்பட்ட நக்ஸல்கள் சரணடைந்திருப்பதன் மூலம் நக்ஸல்களால் தீவிர பாதிப்பை எதிர்கொண்டுள்ள மாவட்டங்கள் 6-இல் இருந்து 3-ஆகவும் (பிஜாபூர், சுக்மா, நாராயண்பூர்), பாதிப்பை எதிர்கொண்ட மாவட்டங்கள் 18-இல் இருந்து 11-ஆகவும் குறைந்துள்ளன' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

20 தொகுதிகள் ஒதுக்கும் கட்சியுடன் கூட்டணி! - விஜய பிரபாகரன் பேச்சு

சேலம் சிற்பக் கலைஞா் ராஜா ஸ்தபதிக்கு பத்ம ஸ்ரீ விருது!

ஊழல் வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்ட ராணுவ அதிகாரியின் ஜாமீன் மனு நிராகரிப்பு

ஆா்ஜேடி செயல் தலைவராக தேஜஸ்வி யாதவ் தோ்வு!

தருமபுரியில் முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்: ஆட்சியா் தொடக்கிவைத்தாா்

SCROLL FOR NEXT