பெங்களூரில் இளம் பெண் மருத்துவர் கிருத்திகா மரண வழக்கில் அவரது கணவரால் மயக்க மருந்து செலுத்தி அவர் கொல்லப்பட்டதாக கிருத்திகாவின் தந்தை பரபரப்பு புகாரை அளித்துள்ளார். தடயவியல் சோதனையில் அந்த மருத்துவரின் உடலில் மயக்க மருந்து கலந்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கிருத்திகா மரண வழக்கில் சுமார் ஆறு மாதங்களுக்குப் பின் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
தமது மகளின் சாவில் மர்மம் இருப்பதாக அவரது தந்தை தொழிலதிபர் கே. முனி ரெட்டி போலீஸிடம் இன்று(அக். 15) திடீரென புகார் அளித்தார். அதில், தமது மகளின் கணவரான மருத்துவர் ஜி. எஸ். மகேந்திர ரெட்டியே கிருத்திகாவை கொன்றிருப்பதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
வரதட்சிணைக் கொடுமை நிகழ்ந்திருப்பதாகாகக் குற்றம் சுமத்தியுள்ள அவர், கடந்த 6 மாதங்களுக்கு முன், ஏப். 21-இல் வாயுத் தொல்லை மற்றும் அது சம்பந்தப்பட்ட வயிற்று உபாதையை குணப்படுத்த ஊசி மூலம் தமது மகளின் உடலில் மருத்துவர் மகேந்திரா மருந்து செலுத்தியதாக தமது மகளிடம் தெரிவித்துள்ளார். அதன்பின், அவர் தமது மனைவியை பெற்றோர் வீட்டுக்கு அழைத்துச் சென்று அங்கேயும் அதே காரணத்தைச் சொல்லி சில மணி நேரம் ஓய்வெடுத்தால் கிருத்திகா நலம்பெற்று விடுவார் என்று தெரிவித்துள்ளார்.
அன்றைய நால் இரவிலும் இன்னொரு டோஸ் மருந்தையும் ஊசி வழியாக கிருத்திகாவுக்கு செலுத்தியிருக்கிறார். இந்த நிலையில், ஏப். 23-இல், ஊசி போட்ட இடத்தில் கிருத்திகாவுக்கு வலி ஏற்பட்டது. இது குறித்து கணவரிடம் கிருத்திகா தெரிவிக்கவே, பயப்பட வேண்டாம் என்று அறிவுரை கூறிய மகேந்திரா அன்றிரவிலும் இன்னொரு டோஸ் மருந்தை செலுத்தியுள்ளார்.
மறுநாள், ஏப். 24-இல், மயங்கிய நிலையில் கிருந்திகா கிடப்பதை அறிந்த பெற்றோர் அவரை மீட்டு அருகிலுள்ளதொரு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
ஆரம்பத்தில், உடல்நலக் குறைவால் சிகிச்சை பலனின்றி கிருத்திகா உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில், மயக்க மருந்து செலுத்தி கொல்லப்பட்டாரா என்ற சந்தேகம் இப்போது எழுந்துள்ளது. தடயவியல் சோதனை முடிவுகளும் இதே சந்தேகத்தை வலுப்படுத்துவதாக அமைந்துள்ளதைத் தொடர்ந்து, இதில் விசாரணை நடத்தினால் மட்டுமே உண்மை வெளிச்சத்துக்கு வரும் என்று கிருத்திகாவின் தந்தை புகாரில் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, கிருத்திகா மரணத்தை கொலை வழக்காக பதிந்து போலீஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர். மருத்துவர் மகேந்திராவை கைது செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.