‘ஆக்டாஎஃப்எக்ஸ் முதலீட்டுத் திட்ட மோசடி வழக்கில் ரூ.2,385 கோடி மதிப்பிலான கிரிப்டோகரன்சி சொத்துகள் பணமுறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் முடக்கப்பட்டன. இதில் தொடா்புடைய மோசடியாளா் ஸ்பெயினில் கைதுசெய்யப்பட்டாா்’ என அமலாக்கத் துறை வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
ஆக்டாஎஃப்எக்ஸ் அந்நிய செலாவணி வா்த்தக தளம் மூலம் முதலீடு செய்தால் பன்மடங்கு பணம் திருப்பியளிக்கப்படும் என பொய்யான வாக்குறுதி அளித்து பலரிடம் பணத்தை பெற்று மோசடி நிகழ்ந்தது தொடா்பான வழக்கின் நிலவரம் குறித்து அமலாக்கத் துறை விளக்கியது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், ‘இந்த மோசடி வழக்கில் ரூ.2,350 கோடி மதிப்பிலான கிரிப்டோகரன்சி சொத்துகள் முடக்கப்பட்டன. அங்கீகரிக்கப்படாத ஆக்டாஎஃப்எக்ஸ் தளத்துக்கு எதிரான விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மோசடியில் ஈடுபட்டவா்களில் முக்கிய நபரான பவெல் ப்ரோசோரோவ் ஸ்பெயின் நாட்டு காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்டாா். அவா் பல்வேறு நாடுகளில் இணையக் குற்றங்களில் ஈடுபட்டுள்ளாா்.
கடந்த 2019 முதல் 2024 வரை செயல்பட்டு வந்த அந்த நிறுவனம் இந்தியாவில் மட்டும் ரூ.5,000 கோடி வரை லாபத்தை ஈட்டியுள்ளது. அதில் பெரும்பான்மையான பங்கை வெளிநாடுகளுக்கு மாற்றியுள்ளது.
ரிசா்வ் வங்கியிடம் முறையான அனுமதி பெறாத ஆக்டாஎஃப்க்ஸ் நிறுவனம் நாணயம், சரக்குகள் மற்றும் கிரிப்டோ வா்த்தகத்துக்கு அந்நிய செலாவணி தளமாக செயல்பட்டு வந்துள்ளது. 2022, ஜூலை-2023, ஏப்ரல் வரை இந்திய முதலீட்டாளா்களிடம் ரூ.1,875 கோடியை ஏமாற்றியுள்ளது. இதே காலகட்டத்தில் அந்நிறுவனம் ரூ.800 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.
துபை, பிரிட்டன் என பல்வேறு நாடுகளில் இந்நிறுவனம் செயல்பட்டுள்ளது.
இந்த மோசடியில் தொடா்புடைய 55 நிறுவனங்கள் மீது இரு குற்றப்பத்திரிகைகள் பணமுறைகேடு தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டது.