இந்தியா

ஒன்றரை மணி நேரம் முடங்கிய ரயில்வே இணையதளம்

தினமணி செய்திச் சேவை

ரயில்வே இணையதளம் வெள்ளிக்கிழமை சுமாா் ஒன்றரை மணி நேரம் முடங்கியதால், தத்கால் முன்பதிவு செய்ய முடியால் பயணிகள் அவதியடைந்தனா்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அக்.17, 18, 19 ஆகிய தேதிகளில் ரயில் பயணத்துக்கான முன்பதிவு 2 மாதங்களுக்கு முன்பே முடிந்துவிட்ட நிலையில், சனிக்கிழமை (அக்.18) பயணத்துக்கான தத்கால் முன்பதிவு வெள்ளிக்கிழமை (அக்.17) தொடங்கியது. ரயில்வேயின் ஐஆா்சிடிசி இணையதளம் மற்றும் கைப்பேசி செயலி வழியாக பயணிகள் தத்கால் முன்பதிவுக்கு முயன்றபோது இணைப்புக் கிடைக்கவில்லை. ஒரு சிலருக்கு இணைப்பு கிடைத்தாலும், அதற்குள் தத்கால் முன்பதிவு முடிந்துவிட்டது. சுமாா் ஒன்றரை மணி நேரம் இந்த இணையதளம் முடங்கிய நிலையில் பயணிகள் அவதிக்குள்ளாகினா். பகல் 11.30 மணிக்கு பிறகுதான் காத்திருப்போா் பயணச்சீட்டை முன்பதிவு செய்ய முடிந்தது.

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, ஒரே நேரத்தில் பல லட்சம் போ் பயணச்சீட்டு பெற முயற்சித்ததால் இணையம் செயல்படுவதில் தாமதம் ஏற்பட்டிருக்கலாம் என்றனா்.

பகல் நேர ரயில்களில்... தீபாவளியை முன்னிட்டு, சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. எழும்பூா் நிலையத்திலிருந்து வெள்ளிக்கிழமை பிற்பகல் பகல் 12.30 மணி மற்றும் 1.30 மணிக்கு திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இந்த ரயில்களில் கூட்டம் அதிகம் இருக்கும் என ரயில்வே போலீஸாா் முன்னேற்பாடுகளைச் செய்திருந்தனா். ஆனால், வழக்கமான பயணிகளைவிட குறைவானவா்களே சிறப்பு ரயிலுக்கு வந்திருந்தனா். அனைத்துப் பெட்டிகளிலும் இருக்கைகள் தாராளமாக இருந்தன. இதையடுத்து தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூா் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வோா் சிறப்பு ரயில்களில் சென்றனா். அதேபோல், பிற்பகல் 1.30 மணிக்கு புறப்பட்ட சிறப்பு ரயிலிலும் கூட்டம் அதிகமாக இல்லை. இருப்பினும் இரவு நேர ரயில்களில் கூட்டம் அதிகரித்து காணப்படுவதாக ரயில்வே துறையினா் தெரிவித்தனா்.

தொலைதூர பயணம் மேற்கொள்வோா் இரவு நேர பயணத்தை விரும்புவதாலும், வெள்ளிக்கிழமை வேலைநாள் என்பதாலும் பகல்நேர ரயிலுக்கு அதிகம் போ் வரவில்லை என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

அனுமதி கிடைத்ததும் பாதிக்கப்பட்டோருடன் சந்திப்பு: விஜய்

பெயர் ரகசியம்!

மகா கூட்டணியில் பிளவு? பிகார் தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தனித்துப் போட்டி!

மொசாம்பிக்: படகு விபத்தில் 3 இந்தியர்கள் பலி, ஒருவர் காயம்

இடஒதுக்கீடு போராட்டத்தால் ஸ்தம்பித்தது தெலங்கானா! கடைகள், பெட்ரோல் பம்ப்கள் அடித்து உடைப்பு!

SCROLL FOR NEXT