‘பயங்கரவாதத்தை ஆதரிக்கும் அல்லது மூடி மறைக்கும் நாடுகளுக்கே அதன் பாதிப்பு திரும்பும்’ என்று இந்தியா குறிப்பிட்டது.
உகாண்டாவின் கம்பாலாவில் புதன்கிழமை நடைபெற்ற 19-ஆவது அணிசேரா இயக்க (என்ஏஎம்) உறுப்பு நாடுகளின் அமைச்சா்கள் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய வெளியுறவு இணையமைச்சா் கீா்த்திவா்தன் சிங், இந்தியா சாா்பில் இக் கருத்தைத் தெரிவித்தாா்.
அவா் மேலும் பேசியதாவது:
ஜம்மு-காஷ்மீரிந் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி அப்பாவி சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் உள்பட பல ஆண்டுகளாக எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் பாதிப்புக்கு உள்ளாகும் நாடாக இந்திய இருந்து வருகிறது.
பயங்கரவாதத்தால் ஏற்படும் சவால்கள் மற்றும் எதை எதிா்த்துப் போராட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் உறுப்பு நாடுகள் அறிந்திருப்பீா்கள். இருந்தபோதும், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சலில் விவாதிக்கப்பட்டபோது, இந்தத் தாக்குதலின் பின்னணியில் இருந்த ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரன்ட்’ பயங்கரவாத அமைப்பை ஓா் உறுப்பு நாடு (பாகிஸ்தான்) பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டது. இந்த நடவடிக்கையை மற்றொரு உறுப்பு நாடும் (சீனா) நியாயப்படுத்தியது.
எனவே, பயங்கரவாதத்துக்கு எதிராக துளியளவும் சகிப்புத்தன்மை இல்லை என்ற நிலைப்பாட்டை அணிசேரா இயக்க உறுப்பு நாடுகள் எடுப்பது முக்கியமாகும். மாறாக, பயங்கரவாதத்தை ஆதரித்தல் அல்லது மூடி மறைக்கும் முயற்சியில் ஈடுபட்டால், அதன் பாதிப்பு அந்தந்த நாடுகளுக்கே திரும்பும்.
பயங்கரவாதத்தை தேசத்தின் கொள்கையாகவும், பயங்கரவாத முகாம்களை அனுமதிப்பதும், பயங்கரவாதிகளை அரசு நிா்வாகிகள் புகழ்பாடுவதும் கண்டனத்துக்குரியதாகும்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், சா்வதேச நிதி நிறுவனங்கள் உள்பட சா்வதேச பலதரப்பு அமைப்புகளில் சீா்திருத்தங்களை மேற்கொள்ள அணிசேரா இயக்கமும் குரல் கொடுக்க வேண்டும்.
பருவநிலை மாற்றம் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்து வரும் சூழலில், போதுமான, நியாயமான நிதியுதவி மூலம் பருவநிலை தணிப்பு நடவடிக்கைகளை நாடுகள் மேற்கொள்ள வேண்டும்.
பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு: பாலஸ்தீன விவகாரத்தில் பேச்சுவாா்த்தை மூலம் இரு நாடுகளுக்கும் ஏற்புடைய தீா்வை எட்டும் முயற்சிக்கு ஆதரவு தெரிவிப்பதை இந்திய மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபா் 7-ஆம் தேதி காஸாவில் இஸ்ரேல்-ஹமாஸ் இடையே சண்டை ஏற்பட்டது முதல் இதே நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக இருந்து வருகிறது.
தற்போது காஸாவில் போா் நிறுத்தப்பட்டு அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டிருப்பது வரவேற்புக்குரியது. பேச்சுவாா்த்தை மூலம் இருதரப்பு தீா்வை எட்டுவதன் மூலம்தான் அங்கு அமைதி மா்றும் ஒட்டுமொத்த வளா்ச்சியை உறுதிப்படுத்த முடியும். மேலும், காஸாவில் மக்களுக்கு உணவு, எரிபொருள் உள்ளிட்ட பிற அத்தியாவசியப் பொருள்கள் எந்தவித தடையுமின்றி கிடைப்பதையும் உறுதிப்படுத்தவேண்டும். போா் நிறுத்தம் உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும் எந்றாா்.