வங்கி ஊழியர் ஒருவர் மேட்ரிமோனி இணையதளத்தின் மூலமாக சுமார் ரூ. 34 லட்சம் இழந்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் பெங்களூரைச் சேர்ந்த வங்கி ஊழியர் அருண்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனது திருமணத்திற்காக வரன் தேடுவதற்கு ஒரு மேட்ரிமோனி இணையதளத்தில் பதிவு செய்துள்ளார்.
அடுத்த ஒரு வாரத்தில் 'மஹிமா மஜ்ஜி' என்ற பெண் பெயரில் அவருக்கு ஒரு 'விருப்ப அழைப்பு' வந்துள்ளது. அவர் பிரிட்டனில் நிதி நிபுணராக இருப்பதாகவும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் என்று கூறி தன்னை அறிமுகப்படுத்தியுள்ளார்.
வாட்ஸ்ஆப்பில் அருணுடன் அவர் பேசி வந்த நிலையில், ஏப்ரல் 25 அன்று தனது பொழுதுபோக்கு, கிரிப்டோகரன்சிகளில் முதலீடு செய்வது என்று கூறி அதுபற்றி பேசியுள்ளார். முதலீடு செய்வதன் மூலம் ஒருவர் எவ்வளவு அதிக வருமானம் ஈட்ட முடியும்? என்பதை விளக்கி தான் முதலீட்டாளர்களில் ஒருவராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
உங்களுக்கு முதலீடு செய்ய ஆர்வம் இருக்கிறதா? என்று அருணிடம் கேட்டுள்ளார். ஆரம்பத்தில் அருண் மறுத்தபோதிலும், நிதி சிக்கல்களைத் தவிர்க்க திருமணம் செய்துகொள்வதற்கு முன்பு ஒன்றாக முதலீடு செய்யலாம் என்று அருணை தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார்.
இறுதியில் அருணும் ஒப்புக்கொள்ளவே மஹிமா ஒரு கிரிப்டோகரன்சி வர்த்தக செயலியை அறிமுகப்படுத்தி, ஒரு லிங்க் அனுப்பினார். அருணும் முதலீடு செய்து நல்ல லாபம் பெற்றார்.
மே 12 அன்று ரூ.60,000, மே 19 அன்று ரூ.1 லட்சம், மே 21 அன்று ரூ.2 லட்சம், பின்னர் ரூ.9 லட்சம், ரூ.5 லட்சம், கடைசியாக ஜூன் 24 அன்று ரூ.4 லட்சம் முதலீடு செய்தார். மொத்தம் ரூ.34.4 லட்சத்தை முதலீடு செய்திருந்தார்.
இதனிடையே மஹிமா, ஜூலை 18 அன்று இந்தியா திரும்புவதாகவும் தங்கள் குடும்பத்தினருடன் திருமண பேச்சுவார்த்தை நடத்தலாம் என்றும் கூறி வந்தார். மேலும் அருணை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து அருண் பதிவு செய்த அனைத்து மேட்ரிமோனிகளில் இருந்தும் பதிவை நீக்குமாறு மஹிமா வலியுறுத்தினார்.
அருணும் அவ்வாறே செய்ய பின்னர் தான் முதலீடு செய்த தளத்தில் இருந்து பணத்தை எடுக்க முயற்சித்தபோது அவரால் முடியவில்லை. பின்னரே அது மோசடி என்று அவருக்கு தெரிய வந்தது.
அந்த இணையதளத்தின் வாடிக்கையாளர் சேவை நிர்வாகி எனக் கூறிக்கொண்டு ஒருவர், அருண் முதலீடு செய்த தொகைக்கான வருமான வரி மற்றும் செயலாக்கக் கட்டணங்கள் என முதலீடு செய்த மொத்தத் தொகையில் 5% (ரூ.3.4 லட்சம்) செலுத்துமாறு கேட்டார்.
உடனே இதனை மோசடி என உணர்ந்த அருண், சைபர் ஹெல்ப்லைன் 1930 ஐ அழைத்து புகார் அளித்ததுடன் போலீசிலும் புகார் அளித்தார். மோசடி செய்தவர்களின் கணக்குகளில் இருந்து பணத்தை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மோசடிகள் தற்போது பல முறைகளில் அதிகரித்து வரும் நிலையில் சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் அதிகாரிகளே அதில் சிக்கி வருகின்றனர். குறிப்பாக அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள், வங்கி ஊழியர்கள் என பலரும் தாங்கள் சேமித்த பணத்தை இழந்து வருகின்றனர்.
எந்தவொரு முதலீடாக இருந்தாலும் முறையாக நிதி ஆலோசகரின் ஆலோசனை பெற்று நீங்கள் முதலீடு செய்ய உள்ள நிறுவனம் குறித்து கேட்டறிந்த பின்னர் பணத்தைச் செலுத்துவது நல்லது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.