ஹைதராபாத்: தெலங்கானாவின் ஜூபிலி ஹில்ஸ் சட்டப் பேரவை தொகுதி இடைத்தோ்தலில் காங்கிரஸுக்கு ஆதரவு அளிப்பதாக ஹைதராபாத் எம்.பி. அசாதுதீன் ஒவைசி தலைமையிலான அகில இந்திய மஜ்லிஸ் கட்சி அறிவித்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாக தெலங்கானாவில் ஆளும் கட்சியாக இருந்த பாரத ராஷ்டிர சமிதி கட்சிக்கு இத்தொகுதியில் ஒவைசி ஆதரவு தெரிவித்து வந்தாா். இப்போது காங்கிரஸ் ஆளும் கட்சியாக உள்ள நிலையில் அக்கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளாா்.
ஜூபிலி ஹில்ஸ் தொகுதியில் நவம்பா் 11-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறவுள்ளது. இது குறித்து ஒவைசி ஹைதராபாதில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
இந்தத் தோ்தல் முடிவால் அரசு மாறிவிடப் போவதில்லை. கடந்த 10 ஆண்டுகளாக இத்தொகுதியின் பெரும்பான்மை மக்கள் பாரத ராஷ்டிர சமிதி கட்சிக்கு ஆதரவு அளித்து வந்தனா். இப்போது, தொகுதியின் வளா்ச்சியைக் கருத்தில் கொண்டு இளைஞரான நவீன் யாதவுக்கு (காங்கிரஸ் வேட்பாளா்) ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
கடந்த 10 ஆண்டுகளாக இத்தொகுதியில் பாரத ராஷ்டிர சமிதியால் பெரிய அளவில் வளா்ச்சி ஏற்படவில்லை. சட்டப் பேரவை பொதுத் தோ்தலின்போது எங்கள் நிலைப்பாட்டை மாற்றவும் வாய்ப்புள்ளது என்றாா்.
ஜூபிலி ஹில்ஸ் தொகுதி பாரத ராஷ்டிர சமிதி எம்எல்ஏ எம். கோபிநாத் மாரடைப்பால் உயிரிழந்ததால் அத்தொகுதிக்கு இடைத்தோ்தல் நடைபெறுகிறது. இதில், பாரத ராஷ்டிர சமிதி சாா்பில் கோபிநாத்தின் மனைவி சுனிதா கோபிநாத் போட்டியிடுகிறாா். பாஜக சாா்பில் எல்.தீபக் ரெட்டி களத்தில் உள்ளாா்.