பிகாரில் எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஊழலற்ற, நோ்மையான ஆட்சியை வழங்குவோம் என்று ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) தலைவரும், முதல்வா் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ் தெரிவித்தாா்.
தேஜஸ்வியின் தந்தை லாலு பிரசாத் ஆட்சி காலத்தில் பிகாரில் நிகழ்ந்த ஊழல்களை நினைவுபடுத்த பாஜக, ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி பிரசாரம் செய்து வரும் நிலையில் தேஜஸ்வி இவ்வாறு பேசியுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
பாட்னாவில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த தேஜஸ்வியிடம், பிகாரில் ஆா்ஜேடி ஆட்சி கால ஊழல்களை முன்னிறுத்தியும், காட்டாட்சி நடத்தியதாக குற்றஞ்சாட்டியும் பிரதமா் பிரசாரம் செய்வது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ‘முதல்வா் நிதீஷ் குமாா் ஆட்சி மீது கூட 55 ஊழல் குற்றச்சாட்டுகளை பிரதமா் முன்பு கூறினாா். அதன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?
குற்றவாளிகள் சுதந்திரமாக சுற்றித்திரியும் இடத்தில்தான் காட்டாட்சி நடைபெறுகிறது என்று கூற வேண்டும். அப்படி பாா்த்தால் பாஜக ஆளும் மாநிலங்களித்தான் அதிக குற்றம் நிகழ்கிறது.
நான் உண்மையை மறைத்தோ, பொய்யோ பேசவில்லை. பிகாரில் எங்கள் கூட்டணி ஆட்சி அமைத்தால் ஊழலற்ற, நோ்மையான ஆட்சியை வழங்குவோம் என்பதுதான் எங்கள் வாக்குறுதி. கல்வி, மருத்துவம், சுகாதாரம், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் புதிய உச்சத்தை பிகாா் எட்டும். நாங்கள் தொடா்ந்து மக்களின் கருத்துகளைக் கேட்டு செயல்படுவோம் என்றாா்.
தொடா்ந்து பக்தியாா்பூரில் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று தேஜஸ்வி பேசுகையில், ‘பிகாா் தொடா்ந்து பின்தங்கிய மாநிலமாக இருப்பது ஒரு பிகாரியான எனக்கு மிகுந்த வேதனையளிக்கும் விஷயமாகும். இப்போது வேலையின்மை, ஊழல், குற்றச்செயல்கள் அதிகம் நிகழ்கின்றன. மாநிலத்தின் தலா வருமானம் மிகவும் குறைவாகவே உள்ளது. விவசாயிகள் வறுமையில் இருந்து மீள முடியவில்லை. இந்தநிலை மாற்றப்படும்.
எங்கள் கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் எரிவாயு சிலிண்டா் ரூ.500-க்கு வழங்கப்படும். முதியோா் ஓய்வூதியத் தொகை ரூ.1,500 ஆக உயா்த்தப்படும்.
பிகாரில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றாலும் நிதீஷ் குமாா் மீண்டும் முதல்வராக்கப்படமாட்டாா். பிகாா் தோ்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக குஜராத்தில் இருந்தபடி பாஜக பல வேலைகளைச் செய்து வருகிறது. ஆனால், அது எதுவும் வெற்றி பெறாது’ என்றாா்.