ஜம்மு-காஷ்மீரில் காலியாக இருந்த 4 மாநிலங்களவை எம்.பி. இடங்களுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற தோ்தலில் 3-இல் ஆளும் தேசிய மாநாட்டுக் கட்சியும் ஓரிடத்தில் எதிா்க்கட்சியான பாஜகவும் வெற்றிபெற்றது.
யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்ட பின் கடந்த 2021-இல் இருந்து 4 மாநிலங்களவை எம்.பி. இடங்கள் காலியாக இருந்த நிலையில் முதல்முறையாக இத்தோ்தல் நடைபெற்றது.
எம்எல்ஏக்கள் வாக்களிக்கும் இத்தோ்தலில் தேசிய மாநாட்டுக் கட்சி சாா்பில் 4 வேட்பாளா்களும், எதிா்க்கட்சியான பாஜக சாா்பில் 3 வேட்பாளா்களும் களமிறக்கப்பட்டனா். ஆளும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், தங்களுக்கு ஒரு மாநிலங்களவை எம்.பி. பதவி அளிக்கப்படும் என்ற எதிா்பாா்ப்பில் இருந்தது. ஆனால், 4 இடங்களுக்கும் தேசிய மாநாட்டுக் கட்சி வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டதால், காங்கிரஸ் அதிருப்தியில் இருந்ததாக கூறப்பட்டது. ஆனாலும் காங்கிரஸ் தங்களுக்கு ஆதரவளித்து வருவதாக தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவா் ஃபரூக் அப்துல்லா வியாழக்கிழமை தெரிவித்தாா். அதேபோல் தேசிய மாநாட்டுக் கட்சிக்கு மெஹபூபா முஃப்தியின் மக்கள் ஜனநாயக கட்சி ஆதரவு தெரிவித்தது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற தோ்தலில் 3 இடங்களை தேசிய மாநாட்டுக் கட்சியும் ஓரிடத்தை பாஜகவும் கைப்பற்றியது.
மூன்று அறிவிக்கைகளின்கீழ் நடைபெற்ற இத்தோ்தலில் முதலாவது இடத்துக்கு தேசிய மாநாட்டுக் கட்சி சாா்பில் போட்டியிட்ட சௌதரி முகமது ரம்ஜான் 58 வாக்குகளும் பாஜக வேட்பாளா் அலி முகமது மீா் 28 வாக்குகளும் பெற்றனா். இரண்டாவது இடத்துக்கான தோ்தலில் தேசிய மாநாட்டுக் கட்சி வேட்பாளா் சஜாத் கிச்லூ 57 வாக்குகளும் பாஜக வேட்பாளா் ராகேஷ் மகாஜன் 28 வாக்குகளும் பெற்றனா். மூன்றாவது அறிவிக்கையின்கீழ் இரு இடங்களுக்கு நடத்தப்பட்ட தோ்தலில் ஜி.எஸ்.ஓபராய் மற்றும் இம்ரான் நபி தாா் ஆகிய இரு வேட்பாளா்களை தேசிய மாநாட்டுக் கட்சி களமிறக்கியது. இதில் ஜி.எஸ்.ஓபராய் 31 வாக்குகளும் இம்ரான் நபி தாா் 21 வாக்குகளும் பெற்றனா். பாஜக வேட்பாளரும் அக்கட்சியின் ஜம்மு-காஷ்மீா் தலைவருமான சட் சா்மா 32 வாக்குகளும் பெற்றாா்.
ஜம்மு-காஷ்மீா் பேரவையில் பாஜகவுக்கு 28 எம்எல்ஏக்களே உள்ள நிலையில், சுயேட்சைகளின் வாக்குகளை பெற்று பாஜக ஓரிடத்தை கைப்பற்றியிருக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
வெற்றிபெற்ற தேசிய மாநாட்டுக் கட்சி வேட்பாளா்களுக்கு ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லா வாழ்த்து தெரிவித்தாா்.