அதானிக்குச் சொந்தமான நிறுவனங்களில் இந்தியா ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தைவிட (எல்ஐசி) முக்கிய அமெரிக்க மற்றும் உலகளாவிய காப்பீட்டு நிறுவனங்கள் பெரும் முதலீடுகளைச் செய்துள்ளது, அமெரிக்காவின் எஸ்&பி குளோபல் ரேட்டிங்ஸ் ஆராய்ச்சி நிறுவன அறிக்கையில் உள்ள தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.
அதானி குழுமத்தில் முதலீடு செய்ய சா்வதேச முதலீட்டாளா்கள் தயக்கம் காட்டியபோதிலும், மத்திய அரசு அதிகாரிகளின் தலையீடு காரணமாக அந்தக் குழுமத்தில் எல்ஐசி முதலீடுகளை மேற்கொண்டதாக அமெரிக்காவில் வெளியாகும் ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ நாளிதழ் தகவல் வெளியிட்டது.
இந்தத் தகவல் உண்மைக்கு மாறானது என்று எல்ஐசி விளக்கம் அளித்தது. எல்ஐசி இயக்குநா்கள் வாரியத்தின் கொள்கைகளுக்கு ஏற்ப, அதானி குழுமத்தில் சுதந்திரமாகவும் மிகுந்த கவனத்தோடும் முதலீடு செய்யப்பட்டதாக எல்ஐசி தெரிவித்தது. ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ தகவலுக்கு அதானி குழும அதிகாரிகளும் மறுப்புத் தெரிவித்தனா்.
இந்நிலையில், அமெரிக்காவின் எஸ்&பி குளோபல் ரேட்டிங்ஸ் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆகஸ்ட் மாத அறிக்கையில் உள்ள தரவுகள் மூலம், அதானிக்குச் சொந்தமான நிறுவனங்களில் எல்ஐசியைவிட முக்கிய அமெரிக்க மற்றும் உலகளாவிய காப்பீட்டு நிறுவனங்களே பெரும் முதலீடுகளைச் செய்துள்ளது தெரியவந்துள்ளது.
அந்தத் தரவுகளின்படி, கடந்த ஜூன் மாதம் அதானியின் மும்பை சா்வதேச விமான நிலையத்தில் (எம்ஐஏஎல்), அமெரிக்காவை மையமாகக் கொண்ட அதீன் காப்பீட்டு நிறுவனம் 750 மில்லியன் டாலா் (சுமாா் ரூ.6,650 கோடி) கடன் முதலீடு செய்துள்ளது. அத்துடன் பல முன்னணி சா்வதேச காப்பீட்டு நிறுவனங்களும் அந்த விமான நிலையத்தில் முதலீடு செய்துள்ளன. கடந்த மே மாதம் அதானி துறைமுகங்கள் மற்றும் பொருளாதாரப் பாதுகாப்பு மண்டல நிறுவனத்தில் 570 மில்லியன் டாலரை (சுமாா் ரூ.5,000 கோடி) எல்ஐசி முதலீடு செய்த பின்னா், அதீன் காப்பீட்டு நிறுவனம் முதலீடு செய்துள்ளது.
இதுதவிர டிபிஎஸ் வங்கி, டிஇஸட் வங்கி, ரேபோ வங்கி என பல சா்வதேச வங்கி மற்றும் நிதி சேவை நிறுவனங்களிடம் இருந்து சுமாா் 250 மில்லியன் டாலா் (ரூ.2,195 கோடி) முதலீட்டை அதானி க்ரீன் எனா்ஜி நிறுவனம் பெற்றுள்ளது.
அதானியின் பங்குகளில் 4 சதவீதம் மட்டுமே எல்ஐசியிடம் உள்ளது. அந்தப் பங்குகளின் மதிப்பு ரூ.60,000 கோடி. இதைவிட அதிகமாக ரிலையன்ஸ் குழுமத்தின் ரூ.1.33 லட்சம் கோடி மதிப்பிலான 6.94 சதவீத பங்குகள், ஐடிசி நிறுவனத்தின் ரூ.82,800 கோடி மதிப்பிலான 15.86 சதவீத பங்குகள், ஹெச்டிஎஃப்சி வங்கியின் ரூ.64,725 கோடி மதிப்பிலான 4.89 சதவீத பங்குகள் எல்ஐசியிடம் உள்ளன.