FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

மீண்டும் அனல் பறக்கும் அதானி குழும முறைகேடு! அமெரிக்க புலனாய்வு தகவலை சுட்டிக்காட்டும் காங்கிரஸ்

மீண்டும் அனல் பறக்கும் அதானி குழும முறைகேடு என அமெரிக்க புலனாய்வு அமைப்பின் தகவலை சுட்டிக்காட்டும் காங்கிரஸ்

Updated On : 18 பிப்ரவரி 2026, 5:05 pm IST
அதானி குழுமம்
பகிர்:

அதானி குழுமத்தில் அதானி நிர்வாக உறுப்பினர்களுக்கு நெருங்கிய கூட்டாளிகளான சாங் சுங்-லிங் மற்றும் நாசர் அலி ஷபான் அஹ்லி ஆகியோர் பினாமி நிதியைப் பயன்படுத்தி வெளிநாட்டில் இயங்குவதாகக் கூறப்படும் போலி நிறுவனங்கள் பெயரில் அதிகளவில் பங்குகளை குவித்தது தொடர்பான புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ், அமெரிக்காவில் செயல்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் ஊழல் அறிக்கையிடல் திட்டம் என்ற (OCCRP) புலனாய்வு அமைப்பின் தகவலை மேற்கோள்காட்டி, அதானி குழுமத்தில் நடந்ததாகக் கூறப்படும் புதிய முறைகேடுகள் பற்றி விவரித்துள்ளார்.

ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது, அதானி குழுமத்தைச் சேர்ந்த நிர்வாக உறுப்பினர்களுக்கு நெருங்கிய கூட்டாளிகளான சாங் சுங்-லிங் மற்றும் நாசர் அலி ஷபான் அஹ்லி போன்றவர்கள் பினாமி நிதியைப் பயன்படுத்தி வெளிநாட்டிலிருந்து போலி நிறுவனங்கள் பெயரில் அதிகளவில் பங்குகளை வாங்கியிருப்பதாக ஓசிசிஆர்பி என்ற புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி ஆதாரங்களுடன் வெளியிட்டுள்ளது.

Advertisement

Advertisement

ஏற்கனவே, 2023ஆம் ஆண்டு அதானி நிறுவனப் பங்குகளில் நடந்த முறைகேடு தொடர்பான தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்த சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டவர்கள்தான் இந்த சாங் சுங்-லிங் மற்றும் நாசர் அலி ஷபான் அஹ்லி. இந்த முறைகேடு புகார் உலகையே உலுக்கிய நிலையில், சுவிட்சர்லாந்து வங்கியின் வாடிக்கையாளர்களாக இருக்கும் இவர்களிடம் அந்த வங்கி நடத்திய விசாரணையில், அவர்கள் சில விவரங்களை ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. அதில், 2023-ஆம் ஆண்டு வரை பல்வேறு பினாமி பணம் மூலம் அதானி பங்குகளில் சுமார் 3 பில்லியன் டாலர்கள் வரை பங்குகள் வாங்கியக் குற்றச்சாட்டும் இதில் அடங்கும்.

அதானி வணிகக் குழுமத்தின் மீது, 2023ஆம் ஆண்டு வெளியான முறைகேடு குற்றச்சாட்டில், தொடர்புடைய 24 புகார்களில் 22 புகார்கள், நிலுவையில்தான் உள்ளன விசாரணையில் செபி அமைப்பு இதுவரை எந்த முன்னேற்றத்தையும் காணவில்லை.

அந்தக் குற்றச்சாட்டுகளில் (அ) அதானி குழும நிறுவனங்களில் உள் பங்கு முதலீடுகளில் முறைகேடு (ஆ) குறைந்தபட்ச பொது பங்குதாரர் தொடர்பான விதிகளை மீறுதல்; (இ) ஆகஸ்ட் 25, 2023 அன்று உச்ச நீதிமன்றத்தில் செபி தரப்பில் கூறப்பட்ட சந்தேகத்திற்கிடமான 13 பணப் பரிவர்த்தனைகள் குறித்த விசாரணை; (இ) ஷெல் நிறுவனங்கள் மூலம் அதானி குழுமத்தில் ரூ.20,000 கோடியை மோசடி செய்தது போன்ற குற்றச்சாட்டுகள் அடங்கும்.

இந்த புகார்கள் எழுந்தபோது, அதாவது கடந்த 2023ஆம் ஆண்டு மார்ச் 2ஆம் தேதி அதானி குழும முறைகேடு புகார்கள் குறித்து இரண்டு மாதங்களுக்குள் விசாரணையை முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட விசாரணை இப்போது கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக முடிக்கப்படாமலேயே உள்ளது.

இது தொடர்பாக, காங்கிரஸ் வைக்கும் சில முக்கிய விவாதங்களாக இருப்பவை..

பிரதமரின் மிகவும் விரும்பப்படும் வணிக நிறுவனக் குழுமத்தின் நலனுக்காக, முக்கியமான உள்கட்டமைப்புத் துறைகளின் சொத்துகளை விற்பனை செய்ய அத்துறைகளுக்கு அழுத்தம் கொடுக்க அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித் துறை போன்ற அமைப்புகள் தவறாகப் பயன்படுத்தப்படுவது.

நாட்டின் விமான நிலையங்கள், துறைமுகங்கள் போன்ற முக்கியமான துறைகளில் அதானி குழுமத்துக்கு அளவற்ற வாய்ப்பு உருவாக்க உதவிய தனியார்மயமாக்கல், விரைவில் சிமென்ட், மின்சாரம் மற்றும் பாதுகாப்பு தளவாடங்கள் போன்ற பிற துறைகளுக்கும் விரிவடையும்.

வங்கதேசம், இலங்கை மற்றும் பிற நாடுகளுடன் இந்தியாவுக்கு இருக்கும் தூதரக உறவுகளைப் பயன்படுத்தி அந்நாட்டின் ஒப்பந்தங்கள் அதானி குழுமத்துக்கு வழங்கப்படுவது.

கடந்த 2021 மற்றும் 2023ஆம் ஆண்டுகளுக்கு இடையே, அதிக விலையில் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டு, சாங் மற்றும் அஹ்லியுடன் தொடர்புடைய வர்த்தக நிறுவனங்கள் மூலம் இந்தியாவில் இருந்து ரூ.12,000 கோடி வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டது. இதனால் குஜராத்தில் உள்ள அதானி மின் நிலையங்களிலிருந்து உற்பத்தியான மின்சார விலையை கடுமையாக அதிகரிக்கவும் உதவியது.

இந்தியாவில் அதிக விலை கொண்ட சூரிய மின் ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக கௌதம் அதானி மற்றும் அவரது கூட்டாளிகள் ரூ.2,000 கோடி அளவுக்கு லஞ்சம் கொடுத்ததாக எழுந்திருக்கும் புகார். இந்தப் புகாரை அமெரிக்க அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள் என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments