கடந்த 6 மாதங்களில் இந்தியாவின் முக்கிய நகரங்களில் 30,000-க்கும் அதிகமானோர் முதலீடு மோசடியில் சுமார் ரூ. 1,500 கோடி பணத்தை இழந்துள்ளனர்.
சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வந்தாலும் நன்கு படித்தவர்களே மோசடியில் சிக்கிக் கொள்கின்றனர்.
இந்நிலையில் இந்தியாவில் கடந்த 6 மாதங்களில் மட்டும் முக்கிய நகரங்களில் மோசடி அதிகரித்துள்ளதாக உள்துறை அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
சுமார் 30,000-க்கும் அதிகமானோர் முதலீடு செய்யுபொருட்டு மோசடியில் சிக்கி சுமார் ரூ. 1,500 கோடி பணத்தை இழந்துள்ளதாக உள்துறை அமைச்சகத்தின் சைபர் பிரிவு அறிக்கை தெரிவிக்கிறது.
மொத்தத்தில் 65% குற்றங்கள், பெங்களூர், தில்லி, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் நடந்துள்ளன. மொத்த பண இழப்புகளில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு இதில் அடங்கும். அதிலும் குறிப்பாக பெங்களூர் முதலிடத்தில் இருக்கிறது. இங்கு மட்டுமே 26% குற்றங்கள் நடைபெற்றுள்ளன.
அதேநேரத்தில் தில்லியில் பண இழப்பு அதிகமாக உள்ளது. ஒருவர் சராசரியாக ரூ. 8 லட்சம் இழந்துள்ளார்.
நடுத்தர வயதினர்தான் இலக்கு
பாதிக்கப்பட்டவர்களில் 76% பேர், 30 முதல் 60 வயதுடையவர்கள் என அறிக்கை கூறுகிறது. இதனால் நடுத்தர வயதினரை குறிவைத்துதான் சைபர் தாக்குதல் அதிகம் நடப்பதை இது உறுதி செய்கிறது. ஏனெனில் இவர்கள்தான் முதலீட்டில் அதிக ஆர்வமாக இருப்பார்கள் என்று கூறப்படுகிறது.
அதேநேரத்தில் முதியவர்கள் தாங்கள் சம்பாதித்த பணத்தை முதலீட்டில் போட விரும்புகின்றனர். இதனால் 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 8.62% (சுமார் 2,829 பேர்) இந்த மோசடியில் சிக்கியுள்ளனர்.
மொத்தமாக பாதிக்கப்பட்ட ஒருவரின் சராசரி இழப்பு தொகை ரூ.51.38 லட்சம்.
வாட்ஸ்ஆப், டெலிகிராம்
வாட்ஸ்ஆப், டெலிகிராம் போன்ற செயலிகள் மூலமாகவே சுமார் 20% குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலமாக மக்களை எளிதாக சென்றடைய முடிகிறது என்ற ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது. மாறாக லிங்க்டுஇன், ட்விட்டர் போன்றவை அரிதாகவே பயன்படுத்தப்படுகின்றன. இதன் மூலமாக 0.31% வழக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. மேலும் பல செயலிகள் மற்றும் போலி வலைத்தளங்கள் மூலமாக 41.87% மோசடிகள் நடைபெற்றுள்ளன.
என்ன செய்ய வேண்டும்?
வாட்ஸ்ஆப், டெலிகிராம் போன்ற செயலிகள் மூலமாக வரும் லிங்க்குகளை திறக்க வேண்டாம்.,
அதில் வரும் விளம்பரங்களை அப்படியே நம்ப வேண்டாம்.
நிதி நிபுணர்களுடன் கலந்தாலோசித்து நம்பகமான நிறுவனங்களிடம் முதலீடு செய்யுங்கள்.
முதலில் அதிக லாபம் என்று சொன்னாலே நம்ப வேண்டாம், முறையாக நிறுவனம் குறித்து ஆய்வு செய்து நன்கு தெரிந்த நிதி ஆலோசகரிடம் ஆலோசனை செய்து கொஞ்சமாக கொஞ்சமாக முதலீடு செய்ய வேண்டும். நம்பத்தகுந்த லாபம் வந்தபிறகு இதர தொகையை முதலீடு செய்யலாம்.
ஒருவேளை மோசடிக்கு ஆளானால் உடனடியாக காவல்துறை அல்லது சைபர் குற்றப்பிரிவில் புகார் அளிப்பது அவசியம். பணத்தை மீட்க அவர்கள் தேவையான நடவடிக்கைகளை எடுப்பார்கள். புகார் அளிக்க தயங்க வேண்டாம்.
இணையவழி மோசடிகளுக்கு 1930 அல்லது https://www.cybercrime.gov.in. என்ற இணையதளம் மூலமாகவும் புகார் தெரிவிக்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.