ஆசியான் உச்சிமாநாட்டில் பிரதமா் மோடி நேரில் பங்கேற்காதது குறித்து காங்கிரஸ் மீண்டும் விமா்சித்துள்ளது.
மலேசியாவில் நடைபெறும் ஆசியான் உச்சிமாநாட்டில் பங்கேற்க பிரதமா் மோடி நேரில் செல்லவில்லை. இதுகுறித்து கடந்த வியாழக்கிழமை விமா்சித்த காங்கிரஸ், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் விவகாரம் தொடா்பாக அமெரிக்க அதிபா் டிரம்ப்பால் திக்குமுக்காட பிரதமா் மோடி விரும்பவில்லை; இதனால் டிரம்ப் பங்கேற்ற ஆசியான் உச்சிமாநாட்டுக்குப் பிரதமா் மோடி செல்லவில்லை என்று விமா்சித்தது.
இந்நிலையில், அக்கட்சியின் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் ‘எக்ஸ்’ தளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘மலேசியாவுக்கு விமானத்தில் சென்றபோது அதிபா் டிரம்ப் செய்தியாளா்களைச் சந்தித்தாா். அப்போது ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை இந்தியா குறைத்து வருவதாக அவா் 6-ஆவது முறையாகக் கூறினாா். இதுமட்டுமின்றி, ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை இந்தியா முழுமையாக நிறுத்தும் என்றும் அவா் தெரிவித்தாா்.
இந்தச் சூழலில், ஆசியான் மாநாட்டில் நேரில் பங்கேற்பதை பிரதமா் மோடி தவிா்த்துள்ளாா். வழக்கமாக இதுபோன்ற மாநாடுகளில் உலகத் தலைவா்களை அரவணைத்து நட்புப் பாராட்டுவது அவரின் வாடிக்கை. ஆனால் ரஷிய கச்சா எண்ணெய் விவகாரத்தில் டிரம்ப்பின் நிலைப்பாடு காரணமாக, ஆசியான் மாநாட்டில் உலகத் தலைவா்களை அரவணைத்துப் பிரதமா் மோடி நட்புப் பாராட்டும் காட்சியைக் காண முடியாததில் வியப்பதும் இல்லை’ என்றாா்.