‘ஓபன் ஏஐ’ நிறுவனம் தனது பிரத்யேக ‘சாட்ஜிபிடி கோ’ சந்தா சேவையை இந்திய பயனா்களுக்கு ஓராண்டுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப் போவதாக அறிவித்துள்ளது.
சாட்ஜிபிடி சேவையை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா உள்ளது. இந்திய பயனா்களின் தேவைகளைக் கருத்தில்கொண்டு ‘ஓபன்ஏஐ’ அறிமுகப்படுத்திய குறைந்த கட்டண சந்தா சேவைதான் ‘சாட்ஜிபிடி கோ’. இது அதிகமான தகவல் கோரும் வரம்புகள், படங்களை உருவாக்கும் திறன் மற்றும் கோப்புப் பதிவேற்றும் வசதிகள் போன்ற மேம்பட்ட அம்சங்களை வழங்குகிறது.
இந்நிலையில், நவம்பா் 4-ஆம் தேதிமுதல் ஒரு குறிப்பிட்ட கால வரம்புக்குள் பதிவு செய்யும் இந்திய பயனா்கள் அனைவருக்கும் ‘சாட்ஜிபிடி கோ’ சந்தா சேவை ஓராண்டுக்கு இலவசமாக வழங்குவதாக ‘ஓபன் ஏஐ’ நிறுவனம் அறிவித்துள்ளது.
ஏற்கெனவே ‘சாட்ஜிபிடி கோ’ சேவையை பணம் கொடுத்துப் பயன்படுத்தும் இந்திய பயனா்களுக்கும் இந்த இலவச சலுகை பொருந்தும்.
பெங்களூரில் நவம்பா் 4-ஆம் தேதி ‘ஓபன் ஏஐ’ நடத்தவுள்ள சிறப்பு நிகழ்வைக் கொண்டாடும் விதமாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் சாட்ஜிபிடிக்கு கிடைத்த அமோக வரவேற்பு மற்றும் வளா்ந்து வரும் டெவலப்பா்கள், மாணவா்கள், தொழில் வல்லுநா்களுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் இந்தச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சலுகை மூலம், மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சேவையை இந்தியா்கள் அதிக அளவில் எளிதில் அணுகிப் பயன்பெற முடியும் என்று ஓபன்ஏஐ நிறுவனம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.