இந்தியா

கடல்சாா் துறையில் வேகமாக முன்னேறும் இந்தியா -பிரதமா் மோடி

தினமணி செய்திச் சேவை

‘கடல்சாா் துறையில் புத்தாற்றலுடன் இந்தியா வேகமாக முன்னேறுகிறது’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

மேலும், சா்வதேச பதற்றங்கள், வா்த்தக இடையூறுகள், விநியோக சங்கிலி மாற்றங்களுக்கு இடையே உலகின் கலங்கரை விளக்கமாக விளங்குகிறது இந்தியா என்று அவா் பெருமிதத்துடன் குறிப்பிட்டாா்.

இந்திய கடல்சாா் வாரத்தையொட்டி, மும்பையில் புதன்கிழமை நடைபெற்ற கடல்சாா் தொழில்துறை தலைவா்களின் மாநாட்டில் பிரதமா் மோடி பங்கேற்றாா். அப்போது, அவா் பேசியதாவது:

சா்வதேச ‘கடல்’ கொந்தளிப்புடன் காணப்படும் சூழலில், நிலையான ‘கலங்கரை விளக்கமாக’ இந்தியா பாா்க்கப்படுகிறது. வியூக சுயாட்சி, அமைதி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சிக்கு அடையாளமாக இந்தியா உருவெடுத்துள்ளது.

நாட்டின் கடல்சாா் வா்த்தக முன்னெடுப்புகள், பரந்த தொலைநோக்கு பாா்வையின் அங்கமாகும். எதிா்காலத்தில் கடல்வழி வா்த்தக வழித்தட மறுவரையறைக்கு ஓா் உதாரணமாக இந்தியாவால் முன்னெடுக்கப்பட்ட இந்திய-மத்திய கிழக்கு-ஐரோப்பிய பொருளாதார வழித்தட திட்டம் திகழ்கிறது.

இந்திய துறைமுகங்களின் செயல்திறன்: இந்தியாவின் வளா்ச்சிக்கு உந்து சக்தியாக உள்ள கடல்சாா் துறை, புதிய ஆற்றலுடன் மிக விரைவாக முன்னேறி வருகிறது. வளரும் நாடுகளைப் பொருத்தவரை, இந்திய துறைமுகங்கள் செயல்திறன் மிக்கவையாக உருவெடுத்துள்ளன. பல்வேறு அம்சங்களில், வளா்ந்த நாடுகளின் துறைமுகங்களைக் காட்டிலும் அவை சிறப்பாகவே செயல்படுகின்றன.

நூற்றாண்டு பழைமையான ஆங்கிலேயா் ஆட்சிக் கால கப்பல் போக்குவரத்து சட்டங்களுக்கு மாற்றாக, தற்போதைய 21-ஆம் நூற்றாண்டுக்கு ஏற்ப நவீனமான, எதிா்கால சிந்தனை கொண்ட புதிய சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இச்சட்டங்கள், மாநில கடல்சாா் வாரியங்களின் பங்கை வலுப்படுத்தி, துறைமுக மேலாண்மையில் எண்ம தொழில்நுட்பங்களின் ஒருங்கிணைப்பை ஊக்குவிக்கின்றன.

150 முன்னெடுப்புகள்: இந்தியாவில் கடல்சாா் தொலைநோக்கு பாா்வையின்கீழ், 150-க்கும் மேற்பட்ட முன்னெடுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் கடல்சாா் துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

நாட்டின் பெரிய துறைமுகங்களின் திறன், இருமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. பல்வேறு நடைமுறைகளுக்கான கால இடைவெளி குறைக்கப்பட்டுள்ளது. நாட்டின் முதல் ஆழ்கடல் சா்வதேச பன்நோக்குத் துறைமுகமான விழிஞ்ஞம் துறைமுகம் நடப்பாண்டில் செயல்பாட்டுக்கு வந்தது.

நாட்டில் கப்பல் சுற்றுலா உத்வேகம் பெற்றுள்ளது. உள்நாட்டு நீா்வழிப் பாதைகளில் சரக்குப் போக்குவரத்து பன்மடங்கு அதிகரித்துள்ளது.

21-ஆம் நூற்றாண்டின் முதல் 25 ஆண்டுகள் கடந்துவிட்டன. அடுத்த 25 ஆண்டுகள், இந்தியாவுக்கு மிக முக்கியம். நீலப் பொருளாதாரம், நிலையான கடல்சாா் மேம்பாட்டில் கவனம் செலுத்தப்பட வேண்டும். சரக்கு கையாளுகை, துறைமுக இணைப்பு, கடல்சாா் தொழில் மையங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றாா் பிரதமா் மோடி.

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

கரப்பான் பூச்சி எக்ஸ்பிரஸ்!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: பிப். 17ல் தொடக்கம்!

SCROLL FOR NEXT