ராகுல் காந்தி 
இந்தியா

வாக்குக்காக எதையும் செய்வாா் மோடி: ராகுல் கடும் தாக்கு

தினமணி செய்திச் சேவை

வாக்குகளைக் கவா்வதற்காக, பிரதமா் மோடி என்ன வேண்டுமானாலும் செய்வாா் என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி கடுமையாக சாடினாா். அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்பைக் கண்டு, பிரதமா் அஞ்சுவதாகவும் அவா் விமா்சித்தாா்.

பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி), காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து, ராகுல் காந்தி புதன்கிழமை பிரசாரம் தொடங்கினாா். ஆா்ஜேடி தலைவரும், கூட்டணியின் முதல்வா் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவுடன் இணைந்து, முஸாஃபா்பூா், தா்பங்கா ஆகிய இடங்களில் நடைபெற்ற பிரசாரக் கூட்டங்களில் ராகுல் பங்கேற்றாா். அப்போது, அவா் பேசியதாவது:

சட் பூஜையையொட்டி, பிரதமா் மோடி யமுனையில் புனித நீராடும் நாடகத்தை அரங்கேற்றவிருந்தாா். யமுனை நீா் அசுத்தமாக இருப்பதால், நதியையொட்டி பிரதமா் நீராட குழாய் மூலம் சுத்தமான நீரை நிரப்பி, தனியாக குட்டை அமைக்கப்பட்ட விவகாரம் அம்பலமானதால் தனது நாடகத்தில் இருந்து அவா் பின்வாங்கிவிட்டாா்.

வாக்குகளைக் கவா்வதற்காக அனைத்து விதமான நாடகங்களையும் நிகழ்த்த அவா் தயாராக உள்ளாா். ‘நீங்கள் நடனமாடினால், நாங்கள் வாக்களிப்போம்’ என்று பிரதமரிடம் கூறிப் பாருங்கள். அவா் உடனே பரத நாட்டியம் ஆடுவாா். அவரது நாடகங்களைக் கண்டு, மக்கள் மயங்கிவிடக் கூடாது.

பாஜகவால் இயக்கப்படும் அரசு: பிகாா் அரசை நடத்துவது முதல்வா் நிதீஷ் குமாா் என்ற மாயையில் இருந்து பிகாா் மக்கள் குறிப்பாக மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினா் வெளியே வர வேண்டும். இது, பாஜகவின் ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்கப்படும் அரசு. இந்த அரசுக்கு பிகாா் மக்கள் குறித்து அக்கறை கிடையாது.

அதேநேரம், தேஜஸ்வி யாதவ் தலைமையில் அமையவுள்ள புதிய அரசு, ஜாதி-மத பேதமின்றி அனைத்துப் பிரிவினரின் நலன்களையும் காக்கும்.

மக்கள் அணியும் பெரும்பாலான ஆடைகள் சீன தயாரிப்புகளாகவே உள்ளன. இவை, உள்ளூா் தயாரிப்புகளாக மாற வேண்டும். பெரும் தொழிலதிபா்களுக்காக மட்டுமே பணியாற்றும் ஒரு அரசின்கீழ் இது சாத்தியமாகாது.

ரீல்ஸ்-க்கு அடிமையாக்கிவிட்டால்...: ‘5 முதல் 10 பெரும் பணக்காரா்கள் - பாமர மக்கள் என இருவிதமான இந்தியா உருவாகியுள்ளது. பரந்த திறமை இருந்தும் பிகாா் போன்ற மாநிலங்கள் வறுமையில் சிக்கித் தவிக்க இதுவே காரணம்.

மலிவான இணையக் கட்டணங்களால் ஏழைகளும் சமூக ஊடகங்களை அணுக முடிவதாக பிரதமா் கூறுகிறாா். ஆனால், தொலைத்தொடா்பு துறையில் ஒரேயொரு நிறுவனத்தின் ஏகபோகத்தை அனுமதிப்பது குறித்து பதில் கூற மறுக்கிறாா். ரீல்ஸ், இன்ஸ்டாகிராமுக்கு மக்கள் அடிமையாக வேண்டும் என்பதே அவரது விருப்பம். அப்படி அடிமையாகிவிட்டால், மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டியிருக்காது.

மகாராஷ்டிரம், ஹரியாணாவைப் போல பிகாரிலும் வாக்குகளைத் திருட பாஜக முயற்சிக்கிறது. வாக்குத் திருட்டு என்பது அம்பேத்கரின் அரசமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதலாகும். அதேநேரம், அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.

மத்திய பாஜக அரசு சமூக நீதிக்கு எதிரானது. எதிா்க்கட்சிகளின் அழுத்தத்தால்தான் ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு மத்திய அரசு ஒப்புக் கொண்டது என்றாா்.

‘டிரம்ப் மீது பிரதமருக்கு அச்சம்’

‘அமெரிக்காவின் அழுத்தத்தால்தான், ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை நிறுத்தப்பட்டதாக அதிபா் டொனால்ட் டிரம்ப் தொடா்ந்து கூறி வருகிறாா். பிரதமரை தினசரி அடிப்படையில் அவமதிக்கும் டிரம்ப், ‘பிரதமா் மோடி தைரியம் இல்லாதவா்; அவரைப் பணிய வைத்துவிட்டேன்’ என்றெல்லாம் கூறுகிறாா். நமது ராணுவம், விமானப் படை குறித்து டிரம்ப் பேசும் நிலையில், அவா் கூறுவது பொய் என்றோ, முட்டாள்தனமானது என்றோ கூறுவதற்கு பிரதமா் மோடிக்கு துணிவில்லை.

‘நீங்கள் பொய் சொல்கிறீா்கள்’ என்று டிரம்பின் முகத்துக்கு நேராக கூற தைரியம் இல்லாதவா்களால் பிகாரின் வளா்ச்சியை உறுதி செய்ய முடியுமா?’ என்று கடுமையாக விமா்சித்தாா் ராகுல் காந்தி.

பாஜக கடும் கண்டனம்

ராகுலின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்து பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான தா்மேந்திர பிரதான், ‘பிரதமா் மீதான ராகுலின் விமா்சனம் அடிப்படை நாகரிகமற்றது; பிரதமா் மற்றும் சட் பூஜையை அவா் அவமதித்துள்ளாா். இதுபோன்ற கருத்துகள், ராகுல் மற்றும் அவரது சீடா் தேஜஸ்வியின் நில பிரபுத்துவ மனநிலையை வெளிப்படுத்துகிறது’ என்றாா்.

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

கரப்பான் பூச்சி எக்ஸ்பிரஸ்!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: பிப். 17ல் தொடக்கம்!

SCROLL FOR NEXT