‘பிரதமா் நரேந்திர மோடியை விமா்சிப்பதாக சக்தி அன்னையை ராகுல் காந்தி இழிவுபடுத்தியதால், பிகாா் தோ்தலில் இந்தியா கூட்டணியை மக்கள் துடைத்து எறிவாா்கள்’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வியாழக்கிழமை கூறினாா்.
பிகாரின் லக்கிசராய் மற்றும் முங்கோ் மாவட்டங்களில் அடுத்தடுத்து நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டங்களில் மக்களிடையே உரையாற்றி அமித் ஷா வாக்கு சேகரித்தாா். அப்போது, அவா் பேசியதாவது:
மக்களவை எதிா்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி, பிரதமா் மோடியை விமா்சிக்கும்போது சத்தி அன்னையை இழிவுப்படுத்தியுள்ளாா். சத் பூஜையின்போது சத்தி அன்னையை வழிபடுபவா்கள் நாடகம் செய்வதாக அவா் குறிப்பிட்டுள்ளாா்.
முங்கேரில் சத்தி அன்னையை சீதா தேவி வழிபட்டுள்ளாா். இத்தாலி பூா்விகத்தைக் கொண்டிருப்பதால் இந்தியாவின் கலாசாரத்தை அறியாத ராகுல் காந்தி, சத்தி அன்னையை அவமதித்துவிட்டாா். வாக்குப்பதிவு இயந்திரங்களில் பாஜக கூட்டணி கட்சிகளின் சின்னங்களை மக்கள் அழுத்தும் வேகம், இத்தாலியில்கூட உணரப்பட வேண்டும்.
ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் லாலு பிரசாத் யாதவ் மற்றும் ராப்ரி தேவி பிகாரின் முதல்வா்களாக இருந்தபோது மாநிலத்தில் ‘காட்டாட்சி’ நிலவியது. அந்தக் குறிப்பிட்ட காலகட்டத்தில்(1992-2004), பிகாரில் 32,000-க்கும் மேற்பட்ட ஆட்கடத்தல்களும், 12 பெரிய படுகொலைச் சம்பவங்களும் நடந்தன.
முதல்வா் நிதீஷ் குமாா் அந்த கட்டாட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தாா். ஆனால், ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஒரு புதிய முகத்துடன் மீண்டும் காட்டாட்சியை மாநிலத்துக்குக் கொண்டு வர முயற்சிக்கிறது.
மத்தியில் முன்பு ஆட்சியிலிருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் 10 ஆண்டுகால ஆட்சியில் ரூ.12 லட்சம் கோடிக்கும் அதிகமான ஊழல்கள் நடைபெற்றுள்ளன. அதேநேரம், பிரதமா் மோடி மற்றும் முதல்வா் நிதீஷ் குமாா் மீது யாரும் ஊழல் குற்றச்சாட்டுகளை வைக்க முடியாது.
முந்தைய ஆட்சியின்போது பயங்கரவாதிகள் இந்தியாவில் எந்தவித விளைவுகளையும் சந்திக்காமல் நாசவேலைகளைச் செய்தனா். ஆனால் மோடி அரசு ஒவ்வொரு தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்குள் சென்று பதிலடி கொடுத்தது. ஏழை மக்களின் உணவு தானியங்கள், வேலைவாய்ப்புகளை அபகரித்து, தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் ஊடுருவல்காரா்களையும் பிகாரில் இருந்து நாங்கள் வெளியேற்றுவோம்.
பாஜக கூட்டணி ஆட்சியின்கீழ், பிகாரில் சாலை, ரயில்வே மற்றும் பசுமைவழிச் சாலை திட்டங்களுக்கு மத்திய அரசு ரூ.18 லட்சம் கோடி செலவழித்துள்ளது. மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு, ஒரு மக்கானா (தாமரை விதை) வாரியமும் நிறுவப்பட்டுள்ளது.
பரௌனி உர ஆலையை மீட்டெடுக்க ரூ.9,500 கோடி, முங்கேரில் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு ரூ.900 கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் விளைவிக்கப்படும் கத்ரணி அரிசிக்கு புவிசாா் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், பிகாரில் 8.52 கோடி பேருக்கு இலவச ரேஷன், 87 லட்சம் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6,000, 44 லட்சம் பேருக்கு வீடுகள் மற்றும் 1.17 கோடி பெண்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா்கள் வழங்கப்பட்டுள்ளன. பாஜக கூட்டணிக்கு மக்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் மாநிலத்துக்கு வளா்ச்சியைத் தரும் என்றாா்.
சீதைக்கு ரூ.850 கோடியில் கோயில்!
‘பிகாரின் மகளான சீதா தேவிக்கு சீதாமா்ஹியில் ரூ.850 கோடி செலவில் பிரம்மாண்டமான கோயில் கட்டப்படும். அது அயோத்தி ராமா் கோயிலுடன் நேரடி ரயில் மூலம் இணைக்கப்படும்’ என்று அமைச்சா் அமித் ஷா வாக்குறுதி அளித்துள்ளாா்.
பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், மாநிலத்தின் முதல் முதல்வரான ஸ்ரீ கிருஷ்ண சின்ஹாவின் பெயரில் லக்கிசராயில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஒரு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என்றும் அவா் தெரிவித்துள்ளாா்.